கேரளாவில் 'மிதக்கும் வீடுகள்'


கேரளாவில் மிதக்கும் வீடுகள்
x

தாங்கள் படித்ததை மிதவை வீடுகளாக மாற்றி, கேரள மக்களிடம் பாராட்டுகளை பெற்றுவருகின்றனர் நன்மா கிரீஸ் மற்றும் ஜார்ஜ்.

கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிறைய மக்கள் வீடுகளை இழந்தனர். இந்த சம்பவம், கேரளாவைச் சேர்ந்த நன்மா கிரீஸ் என்ற பெண்ணையும், ஜார்ஜ் என்பவரையும் மனதளவில் உலுக்கி எடுத்திருக்கிறது. கட்டுமான பொறியாளர்களான இவர்கள், வெள்ளப்பெருக்கிலும் பாதிக்காத கட்டுமானங்களை உருவாக்க திட்டமிட்டனர். அதற்காக, கனடா வரை சென்று, சிறப்பு படிப்புகளையும் முடித்தனர். இப்போது, தாங்கள் படித்ததை மிதவை வீடுகளாக மாற்றி, கேரள மக்களிடம் பாராட்டுகளை பெற்றுவருகின்றனர்.

இது குறித்து நன்மா, கூறுகையில், "இயற்கை பேரிடரை எதிர்த்துப் போராடக்கூடிய கட்டுமான தொழில்நுட்பங்களை கேரள மக்கள் தேடத் தொடங்கி இருக்கின்றனர். கேரளா போன்ற மாநிலங்களில் மிதவை வீடு கட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது. மிதவை வீடு கட்டுமானத்தைப் பொறுத்தவரை, எனக்கும் பென் ஜார்ஜுக்கும் ஒரே பார்வை இருந்தது. இருவரும் வகுப்புத் தோழர்களாக இருந்ததால் ஒரே நேர்கோட்டில் செயல்படுவது எளிதாக இருந்தது.

தண்ணீருக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக தண்ணீருடன் வாழ்வதற்கான முயற்சிதான் இது. கனடாவின் தேசிய ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் ஒன்டாரியோவின் வாட்டர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மிதவை கட்டிட ஆராய்ச்சித் திட்டத்தில் நாங்கள் இருவரும் ஈடுபட்டோம்.

மிதவை வீடு என்பது நமது பாரம்பரிய வீடு போன்றதுதான். வெள்ளநீர் வரும்போது மட்டும் மிதக்கும். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குராவிலாங்காட்டில் கடந்த ஆண்டு மிதவை வீட்டின் மாதிரியை உருவாக்கினோம். அதை முன்மாதிரியாக கொண்டு பல மாற்றங்களை செய்து, மிதவை கட்டுமானத்தை மேம்படுத்தி வருகிறோம்" என்றார்.


Next Story