சிறுவன் ஹம்மத் சபி ஆளுமை


சிறுவன் ஹம்மத் சபி ஆளுமை
x

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹம்மத் சபியின் உத்வேகம் அளிக்கக் கூடிய பேச்சைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருகிறார்கள். 13 வயதே ஆன இந்தச் சிறுவன், தன்னைவிட இரண்டு மடங்கு வயது அதிகமான மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், பெஷாவர் பல்கலைக்கழகத்தின் சிறப்பு விரிவுரையாளர் என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொன்றையும் மிகச் சிறப்பாகவும் செய்கிறார். அதனால் இவரை மக்கள், 'சூப்பர் கிட்', 'மோட்டிவேஷனல் குரு', 'லிட்டில் ஜீனியஸ் ஆப் பாகிஸ்தான்' என்றெல்லாம் அழைக்கிறார்கள். இந்தப் புகழும் பாராட்டும் குறித்து எந்தவித கர்வமும் இன்றி, மிக இயல்பாக தன்னுடைய வேலைகளில் கவனமாக இருக்கிறார் சபி.

''இவன் சராசரி குழந்தை இல்லை என்பதை அறிந்துகொண்டேன். இவனுடைய வயது குழந்தைகளை விட எப்போதுமே அதிகமாகச் சிந்திப்பான், செயல்படுவான். அதனால் சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டுதான் பாடம் கற்பித்து வருகிறோம்'' என்கிறார் சபியின் அப்பா அப்துல் ரெஹ்மான் கான்.

சபி, பெஷாவரில் இருக்கும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை. ஒரு நாளைக்கு 10-12 மணி நேரம் படித்துக்கொண்டிருப்பார். தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்வதில் கவனமாக இருக்கிறார். இவர் நடத்தி வரும் யூடியூப் சேனலை 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். சில வீடியோக்கள் 50 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது.

''நான் இந்த நாட்டின் அடையாளமாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பமானால் அதை ஏற்கத் தயாராகிக்கொண்டிருக்கிறேன். எங்கள் நாட்டு இளைஞர்கள் மீது குத்தப்பட்ட தீவிரவாத முத்திரையை அழிப்பதுதான் என்னுடைய லட்சியம். நாங்கள் கொஞ்சம் கடினமாக உழைத்தால் போதும். அதற்காகத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்'' என்கிறார் ஹம்மத் சபி.


Next Story