ரூ.5 லட்சம் கடன் தருவதாக கூறி நெசவாளரிடம் ரூ.1½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ரூ.5 லட்சம் கடன் தருவதாக கூறி மேட்டூர் நெசவாளரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெசவாளர்
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த நெசவாளர் ஒருவர், தனது வீட்டில் தறிக்கூடம் அமைத்து சேலை நெய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் 5-ந் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், 20 சதவீதம் மானியத்துடன் தனியார் நிதி நிறுவனம் மூலம் ரூ.5 லட்சம் கடன் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பிய நெசவாளர், அந்த பதிவில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய மர்ம நபர், ரூ.5 லட்சம் கடன் வழங்குவதற்கு செயலாக்க கட்டணம், ஆவண கட்டணம், காப்பீட்டு கட்டணம், ஜி.எஸ்.டி. போன்றவை செலுத்த வேண்டும் என்பதால், அந்த தொகையை செலுத்துமாறு தெரிவித்துள்ளார். இதன்பேரில், பல்வேறு தவணைகளில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 92-ஐ செலுத்தியுள்ளார். அதன்பிறகு நெசவாளரை தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர், இன்னும் ரூ.19 ஆயிரம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனால் மோசடி செய்வதாக உணர்ந்த அவர் இதுபற்றி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
ரூ.1½ லட்சம் மோசடி
அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, நெசவாளரிடம் கடன் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் டெல்லியில் உள்ள இருவரின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
மிதுன்ராம் மற்றும் கிஷோர் மனைவி பிங்கி என்ற இருவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டெல்லியில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.