கனமழையால் 100 ஏக்கர் விதை நெல் அழுகும் அபாயம்
பரங்கிப்பேட்டை அருகே கனமழையால் தண்ணீரில் மூழ்கிய 100 ஏக்கர் விதை நெல் அழுகும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
பரங்கிப்பேட்டை
நேரடி நெல் விதைப்பு
பரங்கிப்பேட்டை அருகே உள்ள குட்டியாண்டவர் கோவில், சின்ன குமட்டி, குருமாமண்டபம், தோப்பிருப்பு உள்ளிட்டபகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. இங்கு மழைக்காலங்களில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்து அறுவடை செய்வது வழக்கம்.
அதேபோல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு லேசான மழை பெய்ததால் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்தனர். இதையடுத்து நாற்று முளைத்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பரங்கிப்பேட்டை நகரில் இரவில் கனமழை பெய்தது.
விவசாயிகள் கவலை
இதன் காரணமாக மேற்கண்ட கிராமங்களில் உள்ள வயல்களில் தண்ணீர் நிரம்பியது. தண்ணீர் வடிய வசதி இல்லாததால் விதைத்த நெல் விதைகள் அழுகி சேதம் அடையும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பருவமழையை நம்பி லட்ச கணக்கில் செலவுசெய்து நேரடி விதைப்பு மூலம் விதைத்தோம். நாற்று வளர ஆரம்பித்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக வயலில் தண்ணீர் நிரம்பி நிற்கிறது. தண்ணீர் வடிய வழியில்லாததால் விதைத்த நெல் விதைகள் அழுகி சேதம் அடைந்து விடும். எனவே மழைக்காலங்களில் வயலில் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.