127½ கிலோ வெள்ளிக்கட்டிகள் மீட்பு; 6 கார்கள் பறிமுதல்


127½ கிலோ வெள்ளிக்கட்டிகள் மீட்பு; 6 கார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 March 2023 7:30 PM GMT (Updated: 1 March 2023 7:30 PM GMT)
சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அருகே வியாபாரியை கடத்தி வழிப்பறி செய்த கும்பலில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 127½ கிலோ வெள்ளிக்கட்டிகள் மீட்கப்பட்டதுடன், கடத்தல் கும்பல் பயன்படுத்திய கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வெள்ளி வியாபாரி கடத்தல்

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சாந்தா ஜூஜகத்தலே, வெள்ளி வியாபாரி. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி, தனது நண்பர்களான சாகர், ஸ்ரீராம், சந்தோஷ் மற்றும் விக்ரகாந்த் ஆகியோருடன் சேலத்தில் இருந்து சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூருக்கு வெள்ளி வாங்குவதற்காக காரில் சென்றார்.

பின்னர் அவர்கள் அங்கு 127½ கிலோ வெள்ளியை கொள்முதல் செய்து கொண்டு சேலத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஓமலூர் அருகே உள்ள ஆர்.சி.செட்டிப்பட்டி மேம்பாலம் அருகே சேலம் நோக்கி காரில் வந்தனர். அப்போது அந்த வழியாக மற்றொரு காரில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் வெள்ளி வியாபாரி சென்ற காரை வழிமறித்து நிறுத்தியது.

பின்னர் வெள்ளி வியாபாரியின் காரில் வந்த அவரது நண்பர்கள் 4 பேரை மட்டும் வழியில் இறக்கி விட்டு, சாந்தா ஜூஜகத்தலேவை மட்டும் வெள்ளி மற்றும் காருடன் அந்த கும்பல் கடத்தி சென்று விட்டது. பின்னர் சாந்தா ஜூஜகத்தலேவை சங்ககிரி அருகே இறக்கிவிட்ட அந்த கும்பல் கார் மற்றும் வெள்ளியுடன் தப்பிச்சென்று விட்டது.

தனிப்படை விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக சாந்தா ஜூஜகத்தலே ஓமலூர் போலீசில் கொடுத்த புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக, கோவை மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த நாசர் (38), முகஜின் (38), சுரேஷ் குமார் (48), பூபதி என்ற மார்கண்ட பூபதி (39), விஜ்ஜிஷ் என்ற கோகுல் (25), பினோய் (47), ஜோமோன் (35), உள்பட 16 பேரை தனிப்படை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் 4 பேர் கைது

அதே நேரத்தில் ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீஸ் நிலைய பகுதியில் குற்றச்செயலில் ஈடுபட்ட கோடாளி ஜெயன் (45), டைட்டஸ் (33), சந்தோஷ் (39), விபுல் (31) ஆகியோரை போலீசார் ைகது செய்தனர். அவர்களுக்கு வெள்ளி வழிப்பறி வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் அவர்கள் 4 பேரையும் கடந்த மாதம் 20-ந் தேதி காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் 4 பேரும் இந்த வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ரூ.69 லட்சம் மதிப்பிலான 127½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சாந்தாஜூஜகத்தலே காரை மீட்டனர். மேலும் இந்த கும்பல் வெள்ளிக்கட்டிகள், வழிப்பறிக்கு பயன்படுத்திய 5 கார்கள், 5 செல்போன்கள் மற்றும் இரும்பு பைப் ஆகியவற்றை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாஸ்தா தலைமையிலான தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாராட்டு

இதைத்தொடர்ந்து கோடாளிஜெயன், டைட்டஸ், சந்தோஷ், விபுல் ஆகிய 4 பேரையும் இந்த வழக்கு தொடர்பாகவும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்டு திருட்டுப்போன வெள்ளிக்கட்டிகள் முழுவதையும் பறிமுதல் செய்ததுடன், வழிப்பறியில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த தனிப்படை போலீசாரை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோர் நேற்று ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து பாராட்டி கவுரவித்தனர்.


Next Story