வாடிவாசலில் இருந்து 1,553 காளைகள் சீறிப்பாய்ந்தன


வாடிவாசலில் இருந்து 1,553 காளைகள் சீறிப்பாய்ந்தன
x

திருக்கட்டளை, மூக்கம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 1,553 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 40 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

திருவரங்குளம்:

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே திருக்கட்டளையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கோட்டாட்சியர் மாரி தலைமை தாங்கினார். ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இதையடுத்து திருக்கட்டளை சுந்தர மாகாளி அம்மன் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மணப்பாறை, புதுக்கோட்டை உள்ளிட்ட இ்டங்களில் இருந்து வந்திருந்த 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

பரிசு

காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம்-வெள்ளி நாணயங்கள், மிக்சி உள்ளிட்ட பரிசு பொருட்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

ஜல்லிக்கட்டை திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மணப்பாறை, புதுக்கோட்டை, திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வல்லத்திரா கோட்டை போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை திருக்கட்டளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மூக்கம்பட்டி ஜல்லிக்கட்டு

ஆலங்குடி அருகே உள்ள மூக்கம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஆலங்குடி, அன்னவாசல், இலுப்பூர், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 853 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை நெருங்க விடாமல் மிரட்டியது. இதில் 30 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்ைச அளிக்கப்பட்டது. இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசு

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம்-வெள்ளி நாணயங்கள், மின் விசிறி, கட்டில், குக்கர், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, புதுக்கோட்டை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் ஆலங்குடியும், அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளானோரும் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் சம்பட்டிவிடுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மூக்கம்பட்டி கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story