திருவள்ளூர் அருகே வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் ரூ.2¼ லட்சம் மோசடி - வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் ரூ.2¼ லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். ஆனால் இவரது படிப்பபுக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து பிரசாந்த் பல முன்னணி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வேலைக்காக காத்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து பிரசாந்தின் செல்போன் எண்ணுக்கு போன் வந்தது. அதில் பேசிய ஒரு பெண் ஓசூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், வேலை வேண்டி விண்ணப்பித்ததை ஆன்லைனில் பார்த்ததாகவும் தெரிவித்தார். மேலும் அந்த பெண் கூறும்போது:-
உங்களுக்கு எங்களது நிறுவனத்தில் சேர அனைத்து தகுதிகளும் உள்ளது. எனவே உங்களது சான்றிதழ்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்றார். அதை தொடர்ந்து பிரசாந்த் அந்த பெண் தெரிவித்த மின்னஞ்சல் முகவரியில் தனது சான்றிதழ்கள் மற்றும் விவரங்களை அனுப்பினார். அதை பெற்றுக்கொண்ட அந்த பெண் பிரசாந்துக்கு போன் செய்து எங்கள் நிறுவனத்தில் நீங்கள் சேர தகுதியான நபர் என உறுதி அளித்து உங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று உறுதி அளித்தார். இதனால் பிரசாந்த் தனக்கு பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சி அடைந்தார்.
மேலும் பேசிய அந்த பெண் தங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால் டாக்குமெண்ட் கட்டணம், பதிவு கட்டணம், செயலாக்ககட்டணம், இன்சூரன்ஸ் என பல்வேறு பணிகளுக்காக பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.அதை உண்மை என்று நம்பிய பிரசாந்த் கூகுள் பே மற்றும் வங்கி கணக்கு மூலமும் கடந்த ஒரு ஆண்டாக சிறுக சிறுக பணம் அனுப்பி வந்தார்.
இவ்வாறாக அவர் அந்த பெண் தெரிவித்த கூகுள் பே மற்றும் வங்கி கணக்குக்கு இதுவரை ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 250 செலுத்தியுள்ளார். அதை தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தில் இருந்து அவருக்கு அழைப்பாணை மற்றும் வேலையை சேருவதற்கான பணி நியமன ஆணையும் அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலையில் சேருவதற்காக எந்த பணியும் நடைபெறவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த நிறுவனத்திற்கு போன் செய்து தனக்கு எப்போது வேலை கிடைக்கும் என்றும் தான் எப்போது வந்து வேலையில் சேர வேண்டும் என கேட்டார்.
அப்போது பேசிய அந்த பெண் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு நபர் தற்போது கொரோனா காலம் என்பதால் வேலை கொடுப்பதில் காலதாமதம் உள்ளது. சிறிது காலம் கழித்து வேலை தருவதாக கூறி தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் அவர்கள் அளித்த அந்த ஆன்லைன் முகவரியில் சென்று பார்த்தபோது அவர்கள் போலியான மின்னஞ்சலை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனுப்பிய பணி நியமன ஆணை அனைத்தும் போலியானவை என அறிந்து மனவேதனையடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரசாந்த் நடந்த சம்பவம் குறித்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறை இயக்குனர் அமரேஷ் புஜாரி உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யான் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு அசோக் குமார் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ், சப்- இன்ஸ்பெக்டர் மனோஜ் பிரபாகர் தாஸ் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து ஆன்லைனில் மோசடி செய்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசஸ் விசாரணையில் அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சந்தீப் (வயது 35) என தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர்.அவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பதுங்கியிருந்த சந்தீப்பை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 2 செல்போன்கள், 4 சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இவர் மோசடியில் ஈடுபடுவதற்கு உதவியாக இருந்த சந்தீப்பின் 2-வதுமனைவி லாவண்யா தற்போது தலைமறைவாக உள்ளார். சைபர் கிரைம் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் வேறு யாரிடம் எல்லாம் இதே போன்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.