புதுச்சேரியில், காரில் தப்பிய கொலையாளிகளை 25 கிலோமீட்டர் தூரம் விரட்டிப்பிடித்த போலீசார்


புதுச்சேரியில், காரில் தப்பிய கொலையாளிகளை 25 கிலோமீட்டர் தூரம் விரட்டிப்பிடித்த போலீசார்
x
தினத்தந்தி 21 Nov 2017 3:15 AM IST (Updated: 21 Nov 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கொலை செய்துவிட்டு காரில் தப்பிய கும்பலை 25 கிலோமீட்டர் தூரம் விரட்டிச்சென்று போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

கடலூர்,

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் இருந்து அண்ணாசாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் கொளஞ்சிநாதன் (வயது 35) என்பவர் சென்றார். அங்குள்ள பிரபல ஜவுளிக்கடை அருகே சென்றபோது காரில் வந்த ஒரு கும்பல் கொளஞ்சிநாதன் மோட்டார் சைக்கிளில் மோதியது.

இதில் கீழே விழுந்த அவரை அந்த கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் காரில் தப்பிச்சென்றது. இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கொளஞ்சிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் துரத்தினர்

இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுச்சேரி போலீசார் காரில் தப்பிய கும்பலை தீவிரமாக தேடினர். இதற்கிடையே அந்த கும்பல் புதுச்சேரி-கடலூர் சாலையில் அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியபடி மின்னல் வேகத்தில் காரில் சென்றனர். இதை அறிந்த புதுச்சேரி போலீசார் அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றனர்.

மேலும், இதுபற்றி புதுச்சேரி போலீஸ் உயர் அதிகாரிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலூர் மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். அதற்குள் குற்றவாளிகள் ஆல்பேட்டை சோதனைச்சாவடி வழியாக கடலூருக்குள் வேகமாக வந்தனர்.

3 பேர் தப்பி ஓட்டம்

அவர்களை பின்தொடர்ந்து புதுச்சேரி போலீசாரும் வந்தனர். காரில் அதிவேகமாக சென்ற அந்த கும்பல் உழவர் சந்தை அருகே சென்றபோது ஆங்காங்கே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களில் மோதி அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்தினர்.

கார் ஒன்று அதிவேகமாக செல்வதை பார்த்த கடலூர் ஆயுதப்படை போலீசார், அந்த காரை துரத்தினர். கடலூர்-சிதம்பரம் சாலையில் உழவர் சந்தை அருகில் சென்றதும் போக்குவரத்து நெரிசலில் அவர்களால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து ஆயுதப்படை போலீசார் அந்த கும்பலை மடக்கிப்பிடித்தனர். 25 கிலோமீட்டர் தூரம் துரத்திச்சென்ற புதுச்சேரி போலீசாரும் அங்கு வந்து அவர்களை பிடித்தனர். அப்போது காரில் இருந்த 6 பேரும் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவன், தனது கையில் வைத்திருந்த கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டினான். இதில் 3 பேர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.

சரமாரி தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸ் பிடியில் இருந்த 3 பேரையும் சுற்றிவளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். காரின் முன் பக்க கண்ணாடியையும் அவர்கள் உடைத்தனர். தாக்குதலில் அவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிடிபட்ட 3 பேரையும் கடலூர் ஆயுதப்படை போலீசாரும், புதுச்சேரி போலீசாரும் ஒரு ஆட்டோவில் ஏற்றி புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். அப்போதும் அவர்கள் 3 பேரையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

ஆயுதங்கள் பறிமுதல்

பின்னர் பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்கள் 3 பேரையும் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவர்கள் வந்த காரையும், கத்தி, அரிவாள், கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சிவகங்கை மாவட்டம் சித்தலூர் சேவற்கொடி (30), வைரம்பட்டி சிவா என்கிற பரமசிவம் (25), கார் டிரைவரான நெல்மண்டி தெரு சேகர் (26) என்பதும், தப்பி ஓடியது மானாமதுரை உடைகுளம் கண்ணன் (26), மணி (29), நாட்டரசன்பேட்டை அழகர் என்பதும் தெரியவந்தது.

பழிக்குப்பழி

மேலும், கடந்த 2013-ம் ஆண்டு சேவற்கொடியின் அண்ணன் சுதாகரை ஓசூரில் வைத்து கொளஞ்சிநாதன் கொலை செய்துவிட்டு, புதுச்சேரியில் தலைமறைவாக இருந்ததும், அதற்கு பழிக்குப்பழி வாங்க கொளஞ்சிநாதனை சேவற்கொடி தலைமையிலான கும்பல் கொலை செய்ததும் தெரியவந்தது.

பின்னர் புதுச்சேரி கிழக்கு போலீசார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் சென்று பிடிபட்ட 3 பேரையும் புதுச்சேரி அழைத்து சென்றனர். தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

காரில் தப்பிய குற்றவாளிகளை மடக்கிப்பிடித்த தமிழக போலீசாருக்கு புதுச்சேரி கிழக்கு போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி பாராட்டு தெரிவித்தார். 

Next Story