சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்


சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
x
தினத்தந்தி 15 Dec 2017 4:15 AM IST (Updated: 15 Dec 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஆய்வு நடத்துவதற்காக சென்னையில் இருந்து ரெயில் மூலம் பயணிகளோடு எளிய மனிதராக தமிழக கவர்னர் நேற்று பயணத்தை மேற்கொண்டார்.

சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம் (நவம்பர்) 14–ந்தேதி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அந்த விழா முடிந்த பின்னர், அவர் கோவையில் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, கோவை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்திலும் கவர்னர் ஆய்வு செய்தார். அதையடுத்து, சமீபத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது கடலூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக அவர், நேற்று சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு எளிய மனிதராக ரெயிலில் பயணிகளோடு பயணியாக அமர்ந்து பயணத்தை மேற்கொண்டார்.

நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் அவர் பயணம் செய்தார். அவருடைய பயணத்துக்காக 2 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் 9 பேர் பயணம் செய்தனர்.

பொதுவாக கவர்னர் ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் தனிவிமானம், ரெயிலில் தனிப்பெட்டி என்று சிறப்பு ஏற்பாடு இருக்கும். ஆனால் பன்வாரிலால் புரோகித் தனி விமானத்தை விரும்பாதவர் என்றும், விமானத்தில் அவர் பயணத்தை மேற்கொண்டாலும் ‘எக்ஸ்கியூட்டிவ்’ வகுப்பை தேர்வு செய்யாமல், சாதாரண வகுப்பில் தான் பயணம் செய்வார் என்றும் ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், தற்போது ரெயில் பயணத்திலும் தனிப்பெட்டியை விரும்பாமல் பயணிகளோடு பயணியாக எளிய மனிதராக பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.

இதற்கு முன்பு இருந்த கவர்னர்களில் பலர் ரெயில் பயணத்தின் போது ‘சலூன்’ எனப்படும் தனிப்பெட்டியில் தான் பயணத்தை மேற்கொள்வார்கள். ஆனால் இவர், வித்தியாசமாக பயணிகளுடன் அமர்ந்து பயணம் செய்ததை ‘மற்றவர்களுக்கு இவர் ஒரு சிறந்த உதாரணமாகவும், எளிய மனிதராக திகழ்வதாகவும்’ பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.

ஏற்கனவே பன்வாரிலால் புரோகித் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக ரெயில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில் ரெயில் ரத்து செய்யப்பட்டதால் அதை தவிர்த்ததாகவும், வருகிற 17–ந்தேதி சேலத்துக்கு இதேபோல் ரெயிலில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story