மத்திய அரசுக்கு அ.தி.மு.க. துணைபோகிறது வைகோ குற்றச்சாட்டு


மத்திய அரசுக்கு அ.தி.மு.க. துணைபோகிறது வைகோ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Jun 2018 9:45 PM GMT (Updated: 11 Jun 2018 8:24 PM GMT)

தமிழக மக்களுக்கு கேடு செய்யும் மத்திய அரசுக்கு, அ.தி.மு.க. அரசு துணைபோகிறது என்று வைகோ தெரிவித்தார்.

சென்னை,

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* பெரியார்-அண்ணா பிறந்தநாள் விழா - ம.தி.மு.க. வெள்ளிவிழா - வைகோ பொதுவாழ்வு பொன்விழா ஆகிய முப்பெரும் விழாக்களை செப்டம்பர் 15-ந் தேதி ஈரோட்டில் முப்பெரும்விழா மாநில மாநாடாக சிறப்பாக நடத்தப்படும்.

* ‘நீட்’ நுழைவுத் தேர்வை திரும்பப் பெறும் வரை சமூக நீதிக்கான போராட்டம் ஓயாது.

* முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ளவிடாமல் பிரச்சினையை அரசியல் சட்ட அமர்வுக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு முற்படவேண்டும்.

* மத்திய அரசின் இணைச்செயலாளர் பதவிகளில் பா.ஜ.க.வின் குறிப்பாக இந்துத்துவ சக்திகளின் மனப்போக்கை கொண்டவர்களை மத்திய அரசு பணிகளில் அமர்த்துவதற்கு மோசடியான அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது.

முப்பெரும் விழா மாநில மாநாட்டில் என்னுடைய பொதுவாழ்வு பொன்விழாவையும் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். நான் அதை ஏற்கவில்லை. இருந்தாலும் உயர்மட்டக்குழுவினரின் வற்புறுத்தலால் ஒப்புக்கொண்டேன்.

மாநில மாநாட்டில் பங்கேற்க மன்மோகன்சிங், பரூக் அப்துல்லா, சரத்பவார், யஷ்வந்த் சின்கா, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைத்து இருக்கிறோம். இந்த மாநாடு இயக்கத்தின் வரலாற்றில், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழக அரசின் போக்கு கவலை அளிக்கிறது. காவல்துறையை ஏவி, நடவடிக்கை எடுக்கும் அடக்குமுறை அரசாக இருக்கிறது. ஊடகங்கள், பத்திரிகைகளை மிரட்டுகிற வேலைகளை பெரிய சர்வாதிகாரிகள் செய்து தூள் தூளாகி போய்விட்டார்கள். இந்த வேலை அரசுக்கு எதற்கு? எத்தனை காலம் அதிகாரம் செலுத்த முடியும்? எவ்வளவு நாள் ஆட்சியில் இருக்கப்போகிறீர்கள்?

ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளருடன் ‘சீக்ரெட் டீலிங்’ வைத்து இருக்கிறது இந்த அரசு. அவர்களுக்கு சாதகமாக இருக்க தான் பார்க்கிறார்கள். அனில் அகர்வாலுக்கு கூலிப்படையாக அரசு இருக்கிறது. கோர்ட்டில் உத்தரவு பெற்று வந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவந்தாலும் திறக்கவிடமாட்டோம். மக்கள் நலனை காக்க மக்களை திரட்டுவோம்.

இப்படிப்பட்ட நாசக்கார மத்திய அரசை பார்த்தது இல்லை. வருகிற மே மாதம் வரை பல கேடுகளை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு கேடு செய்யும் மத்திய அரசுக்கு, அ.தி.மு.க. அரசு துணைபோகிறது. இந்த 2 அரசுகளும் மக்கள் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story