‘பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவோம்’ அன்புமணி ராமதாஸ் பேட்டி


‘பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவோம்’ அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2018 11:57 PM GMT (Updated: 27 Jun 2018 11:57 PM GMT)

‘சென்னை-சேலம் பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவோம்’ என்று சேலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று பா.ம.க. சார்பில் சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து மக்கள் சந்திப்பு மற்றும் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கி விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

பின்னர் அவர் பேசுகையில், ‘நாட்டின் வளர்ச்சி திட்டத்துக்கு நான் எதிரானவன் அல்ல. விவசாய நிலங்களை அழித்து எந்தவொரு திட்டமும் செயல்படுத்த வேண்டாம். பசுமை வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் முதல்-அமைச்சர் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதையும் மீறி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்துவேன்’ என்றார்.

முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறேன். இந்த கருத்துகளை ஒரு அறிக்கையாக தயாரித்து மத்திய, மாநில அரசுகளிடம் கொடுப்பேன். மேலும் மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மாற்று வழிப்பாதை குறித்தும் விளக்கம் அளிப்பேன்.

அதையும் மீறி பசுமை வழி சாலை திட்டத்தை செயல்படுத்த முயன்றால் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவோம். பசுமை வழி சாலை திட்டம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறி வருகிறார்.

மேலும் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடாக குறைந்தபட்சமாக ரூ.21 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.9.4 கோடி வரை ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும் என்று தவறாக கூறப்படுகிறது. இந்த பசுமை வழிச்சாலை தாம்பரம் அருகே உள்ள படப்பை என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.

அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக குறைந்தது 2 மணி நேரம் ஆகும். எனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு 5 மணி நேரம் ஆகும். இந்த சாலை அமைப்பது தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை.

கஞ்சமலையில் உள்ள இரும்பு தாதுக்களை எடுப்பதற்காகவே இந்த சாலை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இரும்பு தாதுவை எடுக்க விடமாட்டோம். பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை போலீசார் கைது செய்வது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுவேன்.

பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சமூக நீதி போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். அவரை கண்டித்து நாளை (அதாவது இன்று) தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் இந்த பேச்சுக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story