பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 15 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்


பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 15 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்
x
தினத்தந்தி 1 July 2018 12:02 AM GMT (Updated: 2018-07-01T05:32:29+05:30)

பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 15 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் அகரக்கோட்டாலத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன், ரஞ்சித் ஆகியோர் மணிமுக்தா அணை நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிர் இழந்தார்கள்.

விழுப்புரம் மாவட்டம் நல்லரசன்பேட்டையைச் சேர்ந்த சந்துரு என்கிற சந்திரவேலன் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் நீரில் விளையாட சென்றபோது மூழ்கி உயிர் இழந்தார்கள்.

சென்னை கிண்டி நந்தனம் குடியிருப்பில் வசித்து வந்த கிருஷ்ணம்மாள், பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் உயிர் இழந்தார்.

மதுரை மாவட்டம் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபு ஆகியோர் வைகை ஆற்றின் நிலையூர் தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது ஆற்றில் மூழ்கி உயிர் இழந்தார்கள்.

மதுரை மாவட்டம் கோட்டைமேடைச் சேர்ந்த மார்நாடு, தெப்பக்குளத்தில் மூழ்கியும், கோயம்புத்தூர் மாவட்டம் மருதூரைச் சேர்ந்த ரங்குத்தாய் இடிதாக்கியும், கோயம்புத்தூர் மாவட்டம் மூடுதுறையைச் சேர்ந்த கிருத்திக்குமார் நீரில் மூழ்கியும் உயிர் இழந்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் காளம்பாளையத்தைச் சேர்ந்த மீனாட்சி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அனிதா ஆகியோர் மண் சரிவினாலும், ஈரோடு மாவட்டம் ஜம்பை கிராமத்தைச் சேர்ந்த மயில்சாமி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி ஆகியோர் மலைத்தேனீக்கள் தாக்கியும், திருப்பூர் மாவட்டம் தொட்டிபாளையத்தைச் சேர்ந்த கண்ணன் மழை நீரால் அடித்துச்செல்லப்பட்டும் உயிர் இழந்தனர்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிர் இழந்த 15 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிர் இழந்த 15 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story