சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் எதிர்க்கிறார்கள்


சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் எதிர்க்கிறார்கள்
x
தினத்தந்தி 1 July 2018 12:10 AM GMT (Updated: 1 July 2018 12:10 AM GMT)

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சிலர் எதிர்ப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

சேலம்,

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சென்னை-சேலம் பசுமை வழிச்சாலையை நல்ல திட்டம் என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால், எதிர்க்கட்சியினர் இது கமிஷனுக்காக போடப்பட்டத் திட்டம் என்று சொல்கிறார்களே?

பதில்:- இந்த சாலைக்கான நிலம் எடுத்து, நில உரிமையாளர்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருவதுதான் மாநில அரசின் நிலை. இது மத்திய அரசின் திட்டம். மிகப்பெரிய திட்டம் தமிழகத்திற்கு வருகிறது. அதற்கு நாம் உறுதுணையாக இருக்கிறோம். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கொண்டு வரப்படும் திட்டம். இது முழுக்க, முழுக்க மத்திய அரசினுடைய திட்டம். மாநில அரசுதான் செய்யப் போகிறது. மத்திய அரசு நம்முடைய தமிழகத்தில் அந்த சாலையை அமைக்கின்ற காரணத்தினால், அந்த சாலைக்குத் தேவையான நிலத்தை அவர்களுக்கு வழங்குவதற்கு அரசு உதவி செய்கிறது.

கேள்வி:- குறிப்பாக, விவசாய நிலங்கள் வழியாக போகிறதே?

பதில்:- ஏற்கனவே, சட்டமன்றத்தில் தெளிவாக பேசியிருக்கிறேன். விபத்துகளை குறைப்பது மட்டுமல்ல, விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றுவது அரசின் கடமை. அதற்கு ஏற்றவாறு சாலைகளை அமைப்பது, அரசினுடைய நிலைப்பாடு.

சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை போன்ற பகுதிகள் எல்லாம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி, கனரக வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய பகுதி. இப்போது அமைக்கப்படும் சாலை நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாலை. படிப்படியாக வளர்ச்சிக்குத் தக்கவாறு சாலைகளை மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது.

அந்த அடிப்படையில்தான், மிகப்பெரிய சாலையை உருவாக்கித் தர இருக்கிறார்கள். இதன் மூலம் விபத்து குறைக்கப்படுகிறது. தூரம் குறைவது மட்டுமல்லாமல், எரிபொருள் சிக்கனம் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட சாலை நமது பகுதிக்கு கிடைக்கிறது. இந்தப் பகுதிக்கு மட்டுமல்ல, இந்தப் பகுதியின் வழியாக கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல முடியும், சேலத்திற்கு மட்டும் தனியாக போடவில்லை. இந்த சாலை அமைக்கப்படுகின்ற பகுதியில் இருக்கும் நில உடமைதாரர்களுக்கு தேவையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருவதற்கு அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- இழப்பீடு வழங்கும்போது, வழிகாட்டி மதிப்புக்கு 4 மடங்கு அதிகம் கொடுத்தாலும் அதை வைத்து அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது, மாற்று மதிப்பு வேண்டும், அதிலும் குழப்பம் இருக்கிறது, அதை தெளிவுபடுத்த முடியுமா?

பதில்:- சில இடங்களில் ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 3 கோடி, ரூபாய் 4 கோடி கிடைக்கும். ஒரு சில இடங்களில் ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 30 லட்சம் வரை கிடைக்கும். ஒரு தென்னை மரத்திற்குப் பார்த்தீர்களானால், சராசரியாக 17 வயது ஆன மரம், அதாவது, வயதை வைத்துத்தான் நிர்ணயம் செய்கிறார்கள். அப்படி நிர்ணயம் செய்கிறபோது, கிட்டத்தட்ட 17, 18 வயது மரத்திற்கு ரூபாய் 40 ஆயிரம் கிடைக்கிறது. ஒரு தோட்டத்திற்கு 30 மரம் போனாலும்கூட 12 லட்சம் ரூபாய் கிடைக்கும். நிலத்திற்கும் கிடைக்கிறது, மரத்திற்கும் கிடைக்கிறது. நானும் விவசாயம் செய்கிறேன், ஒரு தென்னை மரத்திற்கு வருடத்திற்கு 900 ரூபாய் தான் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இருக்கக்கூடிய பயிர்களுக்குத் தகுந்தவாறு தற்கால நிலையில் மாற்று மதிப்பீடு தருகிறார்கள்.

கேள்வி:- கவுந்தி மலை, கஞ்ச மலைகளில் இருந்து தாதுப் பொருட்கள் எடுக்கக்கூடிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தத் திட்டம் இருப்பதாக சொல்கிறார்களே? இணையதளத்திலேயே ஒரு திட்டம் போடப்பட்டு இருக்கிறதே?

பதில்:- கற்பனையான கேள்விக்கு, யாரும் பதில் சொல்லமுடியாது. இந்தப் பசுமை வழிச்சாலையில், யார், யாருக்கு என்ன தோணுகிறதோ அவைகளை எல்லாம் வெளிப்படுத்துகிறார்கள். சாலையை போடுவதற்குள் இவர்கள் செய்கின்ற விமர்சனம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், தமிழ்நாட்டில் எவ்வளவு வளர்ச்சிப் பணிகள் வந்திருக்கிறது. அதை யாராவது ஒரு சமூக ஆர்வலர் பேசுகிறாரா?

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, இந்த அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்கிற நிலை இருக்கின்ற காரணத்தினால், இதை எப்படியாவது பழி சுமத்தி, மக்களிடத்தில் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி, இதை பெரிய பூதாகரமாக்கி, இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும். இதுதான் அவர்களுடைய குறிக்கோள், மற்ற எந்த நிலையும் கிடையாது. யாருக்கும் தனிப்பட்ட முறையில் இந்த சாலையை அமைக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காக இந்த பசுமை வழிச்சாலை ஏற்படுத்தப்படுகிறது. இதையெல்லாம், நம்முடைய மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

கேள்வி:- விவசாயிகளிடம் நிலம் எடுக்கச் செல்லும்போது, 100, 150 போலீசாருடன் சென்று அடக்குமுறையை கையாள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

பதில்:- அதிகாரிகள் பணி செய்யும்போது அவர்களுடைய பாதுகாப்புக்காக வைத்திருக்கிறார்கள். யாரையும் கஷ்டப்படுத்துவதற்காக அல்ல. இதுவரை, எந்த ஒரு விவசாயியும் வழக்குப் போட்டதும் கிடையாது, அதை தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு நல்ல திட்டம், அருமையான திட்டம். இந்தியாவிலேயே 2-வதாக இந்த பசுமை வழிச்சாலையை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சாலை விரிவாக்கப் பணிக்காக மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.

மாவட்டச் சாலை, மாநில நெடுஞ்சாலைகள் என 19 சாலைகளை தரம் உயர்த்தி, அகலப்படுத்துவதற்கு அவர்கள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மேலும், 21 சாலைகளை விரிவுபடுத்தி, அகலப்படுத்தி, தரம் உயர்த்த வேண்டுமென்பதற்கு கருத்துரு அனுப்பியிருக்கிறோம். அதையும் செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 40 சாலைகள் வர இருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் உட்கட்டமைப்பு மிக முக்கியம். அது இருந்தால் தான், புதிய, புதிய தொழிற்சாலைகளை உருவாக்க முடியும். மக்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பைக் கொடுக்க முடியும். படித்த இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பை உருவாக்கித் தரமுடியும். இந்த சாலை அமைப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். 

Next Story