ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது? அப்பல்லோ ஆஸ்பத்திரி ஊழியர் வாக்குமூலத்தால் குழப்பம்


ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது? அப்பல்லோ ஆஸ்பத்திரி ஊழியர் வாக்குமூலத்தால் குழப்பம்
x
தினத்தந்தி 5 July 2018 11:15 PM GMT (Updated: 5 July 2018 10:29 PM GMT)

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது? என்பது தொடர்பான விவகாரத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி ஊழியர் அளித்த வாக்குமூலத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த், அப்பல்லோ மருத்துவமனையின் தொழில்நுட்ப பணியாளர் நளினி ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

ஜெய்ஆனந்த் தனது வாக்குமூலத்தில், ‘அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்தேன். அப்போது, நர்ஸ் ஒருவரிடம் ஜெயலலிதா சைகை மூலம் பேசிக்கொண்டு இருந்தார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பல நாட்கள் மருத்துவமனையில் சசிகலாவுடன் இருந்துள்ளேன். ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பல நாட்கள் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெயலலிதா கவலைக்கிடமான நிலையில் இருந்து அவ்வப்போது மீண்டு வந்தார். ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்வது சம்பந்தமாக நான் எந்த யோசனையும் தெரிவிக்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

ஜெய்ஆனந்துடன் ஏராளமான வக்கீல்களும், அவரது தந்தை திவாகரன் புதிதாக தொடங்கி உள்ள அண்ணா திராவிடர் கழகத்தின் கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது, ‘எக்கோ’ பரிசோதனை மேற்கொள்வதற்காக அந்த சமயத்தில் பணியில் இருந்த நளினி தான் அழைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரிடம் ஆணையம் கேள்வி எழுப்பியபோது, ‘அன்றைய தினம் பிற்பகல் 3.50 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ‘எக்கோ’ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி என்னை அழைத்தார்கள். ஜெயலலிதாவுக்கு இதயம் செயல் இழந்த பின்பு தான் என்னை அழைத்தார்கள். நான் சென்று பார்த்தபோது, மசாஜ் மூலம் இதயத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். பின்னர், ‘எக்கோ’ பரிசோதனை மேற்கொண்டதில் இதயம் செயல் இழந்து விட்டது தெரியவந்தது’ என்று கூறினார்.

அப்போது ஆணையம் தரப்பு வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், ‘அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மருத்துவ அறிக்கையில் அன்றைய தினம் மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதே?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘மூத்த மருத்துவர்கள் சொன்னதன் அடிப்படையில் அதுபோன்று எழுதி இருக்கலாம்’ என்று நளினி கூறினார்.

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிக்கை, ஊழியர் நளினி வாக்குமூலம் ஆகியவற்றில் முரண்பாடு இருப்பதால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு எப்போது ஏற்பட்டது? என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆணையம் தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.

அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ராஜ்குமார்பாண்டியன், சுப்பிரமணியன் ஆகியோர், ஆய்வின்போது தங்கள் தரப்பையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் ஆஜராகாததால், அந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி 6-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார். 

Next Story