மாநில செய்திகள்

‘தமிழ் சமுதாயத்தின் கடைசி தமிழன் இருக்கும் வரை கருணாநிதி பேசப்படுவார்’ - கவிஞர் வைரமுத்து + "||" + 'Karunanidhi will be spoken till the last Tamil of the Tamil community' - poet Vairamuthu

‘தமிழ் சமுதாயத்தின் கடைசி தமிழன் இருக்கும் வரை கருணாநிதி பேசப்படுவார்’ - கவிஞர் வைரமுத்து

‘தமிழ் சமுதாயத்தின் கடைசி தமிழன் இருக்கும் வரை கருணாநிதி பேசப்படுவார்’ - கவிஞர் வைரமுத்து
கருணாநிதிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து, ‘தமிழ் சமுதாயத்தின் கடைசி தமிழன் இருக்கும் வரை பேசப்படுவார்’ என்று தெரிவித்தார்.
சென்னை,

கருணாநிதி உடலுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீர்மல்க கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது கை வைத்து குலுங்கி, குலுங்கி கண்ணீர் விட்டார்.

கருணாநிதி உடல் மீது மலர் வளையம் வைத்த போது தலையில் அடித்துக்கொண்டு கதறினார். பின்னர் அழுதபடி மு.க.ஸ்டாலினை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.


மிகவும் உணர்ச்சிபூர்வமாக காணப்பட்ட வைரமுத்து சிறிது நேரம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே அமர்ந்தார். கவிஞர் வைரமுத்துவுடன், அவரது மகன்களும் கவிஞர்களுமான கபிலன், மதன் கார்க்கி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியே வந்த கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு கட்சி தலைவன் மறைந்து போனான். ஒரு தமிழ் போராளி மறைந்து போனான். எங்கள் கவியரங்க தலைவன்(மார்பில் அடித்தபடி அழுதார்) மறைந்து போனான். 94 வயது தானே, முதிர்ந்தவர் தானே, மறைவு என்பது இயல்பு தானே, இயற்கை தானே என்று சில பேர் கருதலாம். பெரியார் மூத்த வயதில் மறைந்த போது, கருணாநிதி ஒரு இரங்கல் கவிதை எழுதினார். தாஜ்மஹால் வயதானது என்று அது பூமிக்குள் புதைந்தால் பொறுத்துக்கொள்வோமா? அப்படித்தான் பெரியாரும் என்றார்.

தாஜ்மஹால் பூமிக்குள் புதைந்தால் அது வயதான கட்டிடம் என்று எப்படி பொறுத்துக்கொள்ள முடியாதோ? பெரியார் மூத்த வயதில் மறைந்தார் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ? அப்படியே 94 வயது கொண்ட கருணாநிதியும் மறைந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

சராசரி மனிதனின் மரணம் மரிக்க வைக்கிறது. லட்சியவாதிகளை மரணம் பிறக்க வைக்கிறது. கருணாநிதியின் வரலாறுகளை இளைய சமுதாயம் நெஞ்சில் எழுதிக் கொள்ள வேண்டும். புதிய சமுதாயம் அவருடைய சாதனைகளை நெஞ்சில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும்.இனிவரும் அரசியல் தலைமுறை ஒரு தலைவன் எப்படி வளையாதவனாகவும், எப்படி நிமிர்ந்த நோக்கு உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு கருணாநிதி எடுத்துக்காட்டு. 106 வயது கொண்ட திராவிட பேரியக்கத்தில் 50 ஆண்டுகள் ஒரு மாபெரும் கட்சிக்கு தலைமை தாங்கிய பெருமை கருணாநிதிக்குஉண்டு.

அவர் ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் முத்தமிழுக்கு பங்களிப்பு செய்து இருக்கிறார். மின்சாரமே இல்லாத கிராமத்தில் அவர் பெற்றெடுக்கப்பட்டார். ஆனால் ஏழை விவசாயிகளுக்கு அவர் தான் மின்சாரம் வழங்கினார். பள்ளிப் படிப்பை அவர் தாண்டவில்லை. ஆனால் பல்கலைக்கழகங்களை அவர் தான் உண்டாக்கினார்.

ஒரு போராளி, எழுத்தாளன் இரண்டும் இருவேறு துருவங்கள். போராளியாய் இருப்பவன் படைப்பாளியாய் இருப்பது இல்லை. படைப்பாளியாய் இருப்பவன் போராளியாய் இருப்பதில்லை. படைப்பாளியாகவும், போராளியாகவும், புலவனாகவும், அரசனாகவும் திகழ்ந்த ஒரு மாபெரும் தலைவன் இதோ அங்கு தேசியக் கொடி போர்த்தி (தேம்பி தேம்பி அழுகிறார்) படுத்துக்கொண்டு இருக்கிறார்.

அறிஞர் அண்ணாவுக்கு காலம் ஆயுளை வழங்கவில்லை. பெரியார் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவில்லை. பெரியார் மறுத்த ஆட்சிப் பொறுப்பு, அண்ணாவுக்கு மறுத்த ஆயுள் நீட்டிப்பு இரண்டையும் ஒருங்கே கொண்டவர்(கருணாநிதி) மறைந்து கிடக்கிறார். அவர் மறையமாட்டார்.

எல்லோருக்கும் இழப்பு மாதிரி, எனக்கும் இழப்பு அல்ல. 35 ஆண்டுகள் அதிகாலையில் 7 மணி முதல் 7.20 மணி வரை தொடர்ச்சியாக உரையாடிய அந்த உறவு எங்கே? என்று என் நெஞ்சம் தவித்துக் கிடக்கிறது. என்னுடைய 18 நூல்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். சாதாரணமான எழுத்தாளன் அல்ல அவர் கருணாநிதி எழுதிய நூல்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்கும். ஒரு பெயர் சரித்திரம். நான்கே எழுத்து கலைஞர். அதில் ஒரு நூற்றாண்டையே அடக்கலாம். இந்த மரணம் அவருக்கு சாதாரணம். இந்த மரணத்தால் இன்னும் அதிகம் உணரப்படுவார். இன்னும் அதிகம் கொண்டாடப்படுவார்.

தமிழ் சமுதாயத்தின் கடைசி தமிழன் இருக்கும் வரை அவர் பேசப்படுவார். தமிழ் எழுத்தின் கடைசி எழுத்து இருக்கும் வரை அவர் வாசிக்கப்படுவார். தமிழ் நிலத்தின் கடைசி அங்குலம் இருக்கும் வரை அவருடைய நினைவுகள் போற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.