மாநில செய்திகள்

‘கருணாநிதியின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை’ - அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் கண்ணீர் வீடியோ + "||" + "I could not bear Karunanidhi's closet '- Vijayakanth tears video from the United States

‘கருணாநிதியின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை’ - அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் கண்ணீர் வீடியோ

‘கருணாநிதியின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை’ - அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் கண்ணீர் வீடியோ
கருணாநிதியின் மறைவுக்கு அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க விஜயகாந்த் இரங்கல் வீடியோ வெளியிட்டார். அதில் கருணாநிதியின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-


நான் அமெரிக்காவில் இருந்தாலும் என்னுடைய எண்ணங்களும், நினைவுகளும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. கருணாநிதி இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

நானும், கருணாநிதியும் நல்லா பழகி இருக்கிறோம். அவர் என்னை ‘விஜி’, ‘விஜி’ என்று தான் அழைப்பார். இப்போது அது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது (துக்கம் தாங்காமல் கதறி அழுகிறார்). கருணாநிதியின் மறைவை என்னால் தாங்கமுடியவில்லை. என்னால் நம்பவும் முடியவில்லை (மீண்டும் கதறி அழுகிறார்.

அதைத்தொடர்ந்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வீடியோவில் பேசியதாவது:-

தி.மு.க. தலைவரும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதியுமான கருணாநிதியின் மறைவு ஈடு இணையில்லாதது. அவரை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், தி.மு.க.வினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடன் பழகிய நாட்கள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாது. கருணாநிதியை அப்பாவாகவே நானும், கேப்டனும் நினைத்தோம்.

அவருடைய தலைமையில் தான் எங்கள் திருமணம் நடந்தது. அதை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. நிச்சயமாக தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பேரிழப்பு தான். இந்த இழப்பு ஈடு இணையில்லாதது. கருணாநிதியின் இறுதி சடங்குகளில் பங்குபெறாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். இவ்வாறு பிரேமலதா பேசும்போது அருகில் உட்கார்ந்து இருந்த விஜயகாந்த் அழுதபடியே இருந்தார்.

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு தே.மு.தி.க. சார்பில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் மகன் செண்பக பாண்டியன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை