தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2018 11:15 PM GMT (Updated: 11 Aug 2018 8:37 PM GMT)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் ஏற்பட்டு உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் தூறிக்கொண்டே இருந்தது.

இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு விட்டு, விட்டு மழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடல் காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலம், வால்பாறை, சேந்தமங்கலத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. சின்னக்கல்லார், செங்கோட்டை, மற்றும் தேவலாவில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், சேலம், திருவாரூர், கொல்லிமலை, பாபநாசம், பெருந்துறை, கூடலூர், தொண்டி, தென்காசி, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், உத்தமபாளையம், சென்னை வடக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புழல் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியிருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story