கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்


கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 18 Aug 2018 11:15 PM GMT (Updated: 18 Aug 2018 10:45 PM GMT)

கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. கேரளா, கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் மிக கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்து இருப்பதால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும். தமிழகத்தின் பிறமாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும். இனி வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் வால்பாறை, நீலகிரியில் நல்ல மழை பெய்யும். 20-ந் தேதிக்கு பிறகு அங்கு மெதுவாக மழை அதிகரிக்கும். அதேபோல், காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதியில் 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும்.

வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது. இதனால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை இருக்காது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் தேவலாவில் 11 செ.மீ., சின்னக்கல்லாரில் 10 செ.மீ., வால்பாறையில் 8 செ.மீ., பெரியார், நடுவட்டத்தில் தலா 4 செ.மீ., ஜி பஜாரில் 3 செ.மீ., செங்கோட்டை, குளச்சல், தக்கலையில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

Next Story