பா.ஜ.க.வினர் தாக்கியதாக கூறப்படும் ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு சென்று சந்தித்தார், தமிழிசை சவுந்தரராஜன்


பா.ஜ.க.வினர் தாக்கியதாக கூறப்படும் ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு சென்று சந்தித்தார், தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 18 Sep 2018 10:45 PM GMT (Updated: 18 Sep 2018 9:05 PM GMT)

பா.ஜ.க.வினர் தாக்கியதாக கூறப்படும் ஆட்டோ டிரைவரை அவரது வீட்டுக்கு சென்று தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார். அப்போது, அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இனிப்பு வழங்கி நலம் விசாரித்தார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் கடந்த 16-ந் தேதி இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் தெருக்கூத்து நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நிறைவில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்து கொண்டிருக்கும்போது, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர் தமிழிசையிடம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து அங்கிருந்த பா.ஜ.க.வினர் அவரை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் கதிர் பா.ஜ.க.வினரால் தாக்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியானது.

ஆனால், ஆட்டோ டிரைவர் கதிரை பா.ஜ.க.வினர் யாரும் தாக்கவில்லை என்றும், வேண்டுமென்றே பா.ஜ.க. மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இந்தநிலையில் சைதாப்பேட்டையில் உள்ள ஆட்டோ டிரைவர் கதிர் வீட்டுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சென்றார். அவருடன் பா.ஜ.க. நிர்வாகிகளும் சென்றனர். அங்கு கதிர், அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இனிப்பு வழங்கி நலம் விசாரித்தார்.

அப்போது அவர், ‘உங்களை கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தும்போது நான் சரியாக கவனிக்கவில்லை. நான் அப்போது நிருபர் கேட்ட கேள்விகளுக்கு சிரித்தபடி பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். உங்களை யாரும் தாக்கினார்களா?’, என்று கதிரிடம் கேட்டார்.

அதற்கு அவர் ‘உங்கள் மீது எந்த தவறும் இல்லை. பெட்ரோல் விலை குறித்த எனது ஆதங்கத்தை கேள்வியாக கேட்டேன். யாரும் என்னை தாக்கவில்லை. நான் என்ன உங்களுக்கு எதிரியா, என்னை தாக்குவதற்கு? இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம்’, என்று பதில் அளித்தார்.

அதன் பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கிருந்து புறப்பட்டு தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்துக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் சமீபகாலமாகவே பா.ஜ.க. மீது முன்னுக்கு பின் முரணான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. தமிழக பா.ஜ.க. குறித்து அவதூறுகளும் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. நான் மருத்துவத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவள். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், எத்தனை கேள்விகள் கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லும் ஆற்றல் உள்ளவள்.

பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தின்போது பிடிபட்ட வக்கீல் ஜெகதீசன் பா.ஜ.க. தொண்டர் என்று கூறிவருகிறார்கள். அவருக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் பா.ஜ.க.வையும், பா.ஜ.க. தலைவர்களின் பெயரையும் சீரழிக்கவேண்டும், பா.ஜ.க.வின் உறுதிப்பாட்டை சீர்குலைக்கவேண்டும் என்று திட்டம்போட்டு சிலர் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். தமிழகத்தில் நாங்கள் (பா.ஜ.க.) வேகமாக வளர்ந்து வருகிறோம். எனவே எங்கள் மீது தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எத்தனை தடைகள் ஏற்படுத்தினாலும், பா.ஜ.க.வின் வளர்ச்சியை யாருமே தடுத்துவிட முடியாது.

தமிழகத்தில் மின் பற்றாக்குறை, நிலக்கரி பற்றாக்குறை என்றும் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக தி.மு.க. ‘மின்வெட்டு, மின்வெட்டு’ என்று மத்திய-மாநில அரசுகளை குறைசொல்லி சாகசம் செய்ய பார்க்கிறார்கள். மின்வெட்டால் தான் தி.மு.க. ஆட்சி பறிபோனது. எனவே, அந்த ஆயுதத்தை தற்போது கையில் எடுத்து ஆட்சியை கலைத்துவிடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மு.க.ஸ்டாலினின் இந்த யுக்தி ஒருநாளும் பலிக்காது. மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரி வழங்கப்படும் என்று மத்திய மந்திரி தெளிவாக கூறியுள்ளார். எனவே தமிழகத்தில் நிச்சயம் மின்வெட்டு வராது. ஒருவேளை அந்த சூழ்நிலை வந்தால் மத்திய அரசு அதை தடுத்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story