ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் சொத்துகளை 3 மாதங்களுக்குள் மீட்க வேண்டும் : ஐகோர்ட்டு உத்தரவு


ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் சொத்துகளை 3 மாதங்களுக்குள் மீட்க வேண்டும் : ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Nov 2018 5:05 AM IST (Updated: 1 Nov 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களின் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து 3 மாதங்களுக்குள் அந்த சொத்துகளை மீட்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாகை மாவட்டம் திருப்புகலூர் வேலக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான 12.5 ஏக்கர் பரப்பிலான நிலத்துக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கக்கோரி ஆதீனகர்த்தரான ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நல்ல நோக்கத்துக்காக ஒரு கோவிலுக்கு சிலர் தங்களது சொத்துகளை எழுதி வைக்கின்றனர். ஆனால், இதுபோன்ற கோவில் சொத்துகள், ஆதீனங்களுக்குரிய சொத்துகள், அறக்கட்டளை சொத்துகளில் பல நிலங்களை அபகரிக்கும் கும்பல்களின் கையில் உள்ளது. பேராசைக்காரர்கள், நில மாபியாக்கள், இந்த சொத்துகளை அபகரித்துள்ளனர். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர்.

சில நேர்மையான அதிகாரிகளும், இந்த கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், அமைதியாக உள்ளதால், அவர்களும் மறைமுகமாக இந்த மோசடிகளுக்கு உடந்தையாகத்தான் உள்ளனர். உயர் அதிகாரிகளும், கீழ் நிலை அதிகாரிகளை முறையாக கண்காணிக்காமல் இருக்கின்றனர்.

எனவே, இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் இனிமேலாவது சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன். தமிழக அரசு, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரம் கோவில்களின் சொத்துகள், நகைகள் உள்ளிட்டவற்றை கணக்கெடுக்க வேண்டும்.

கோவில்கள், ஆதீனம், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு சொந்தமான சொத்துகளின் குத்தகை விவரங்களையும், குத்தகை பாக்கிதாரர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், அவர்களின் வாடகை பாக்கி உள்ளிட்ட விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சொத்துகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அந்த சொத்துகளை 3 மாதங்களுக்குள் மீட்க வேண்டும். இதற்காக அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். சொத்துகளை அபகரிப்பதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தி, 2019-ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story