கீழடி ஆய்வு தகவல்களை வரலாற்று பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


கீழடி ஆய்வு தகவல்களை வரலாற்று பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Nov 2018 3:30 AM IST (Updated: 3 Nov 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

கீழடி ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்களை மாநில பாடத்திட்டத்தில் வரலாற்று பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் கீழடியில் சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் 2218 ஆண்டுகளுக்கு முந்தியவை என கரிமப் பகுப்பாய்வில் தெரிய வந்திருப்பதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்திருக்கிறது. தமிழர் நாகரிகப் பெருமையை குலைக்க பல சதிகள் நடந்தும், அவற்றை முறியடித்து இந்த உண்மை உறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த உண்மை மறைக்கப்படாமல் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும். அதை உறுதி செய்வது தான் தமிழர்களாகிய நமது கடமை ஆகும். கீழடி தமிழர் நாகரிகம் தான் தொன்மையானது என்பது நிரூபிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கீழடி அகழாய்வை சீர்குலைக்க ஏராளமான சதிகள் நடைபெற்றது நினைவிருக்கலாம். தமிழருக்கு எதிரான இந்த சதிகளை வரலாற்றின் துணையோடு மட்டும் தான் முறியடிக்க முடியும்.

சிந்து சமவெளி நாகரிகம், மஞ்சளாற்று நாகரிகம், மெசபடோமியா நாகரிகம், நைல் நதி நாகரிகம் போன்றவை குறித்து இன்றும் பேசப்படுவதற்கு காரணம் அவை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பது தான். கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழர் நாகரிகமும் வரலாற்றில் பதிவு செய்யப்படுவதன் மூலம் தான் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் நாகரிகத்தைப் பற்றி உலகம் பேசுவதை உறுதி செய்ய முடியும். அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

அதற்கெல்லாம் மேலாக கீழடி ஆய்வில் இதுவரை தெரியவந்துள்ள தகவல்களைத் தொகுத்து தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் வரலாற்று பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும். அடுத்தடுத்து புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்படும்போது அவற்றையும் சேர்த்து சம்பந்தப்பட்ட பாடங்களை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story