தந்தை பெரியாரின் பெயரை தவறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை; டி.என்.பி.எஸ்.சி. அறிக்கை


தந்தை பெரியாரின் பெயரை தவறாக பதிவிட்டவர்கள் மீது  நடவடிக்கை; டி.என்.பி.எஸ்.சி. அறிக்கை
x
தினத்தந்தி 12 Nov 2018 11:33 AM GMT (Updated: 12 Nov 2018 11:33 AM GMT)

தந்தை பெரியாரின் பெயரை தவறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட ஆயிரத்து 199 பணியிடங்களுக்காக குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது.  இந்த தேர்வு 2 ஆயிரத்து 268 மையங்களில் நடைபெற்றது.

இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்? என்ற கேள்விக்கு தரப்பட்ட 4 விடைகளில் தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது.

காந்திஜி, ராஜாஜி மற்றும் அண்ணா ஆகிய தலைவர்களின் பெயர்கள் சரியான முறையில் அச்சிடபட்டுள்ள நிலையில், பெரியார் பெயர் மட்டும் சாதியுடன் அச்சிடப்பட்டது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் தந்தை பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.

இதற்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குரூப்-2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயரை தவறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

வினாத்தாள் மிகுந்த கவனத்தோடு தயாரிக்கப்பட்டும், தந்தை பெரியாரின் பெயரை தவறாக குறிப்பிட்டதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story