மாநில செய்திகள்

வளிமண்டலத்தில் புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + In the atmosphere New Overlay Cycle Tomorrow in Tamil Nadu It rains for 3 days Weather Research Center Information

வளிமண்டலத்தில் புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டலத்தில் புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
‘வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் மழை பெய்யும்’, என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,

வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல், தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு நேற்று முன்தினம் அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. ‘கஜா’ புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.


இந்தநிலையில் வளிமண்டலத்தில் உருவாகி இருக்கும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

தெற்கு அந்தமான் பகுதி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (இன்று) மாலை தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறிப்பாக மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.

இது நாளை மற்றும் நாளை மறுநாளில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதனால் 19-ந்தேதி (நாளை) முதல் 21-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடனேயே காணப்படும். 19-ந்தேதி (நாளை) மற்றும் 20-ந்தேதியில் (நாளை மறுநாள்) மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் சிவகங்கையில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கொடைக்கானலில் 14 செ.மீ. மழை பெய்திருக்கிறது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்த வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 18-ந்தேதி (இன்று) மற்றும் 19-ந்தேதியும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 19-ந்தேதியும், 20-ந்தேதியும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்.

வங்கக்கடல் பகுதிகளை பொறுத்தவரையில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 18-ந்தேதியும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 19-ந்தேதியும், 20-ந்தேதியும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ‘கஜா’ புயல் மீண்டும் வலுப்பெறுகிறது
தமிழகம், கேரளாவுக்கு பாதிப்பில்லை

தமிழகத்தை புரட்டிப்போட்ட ‘கஜா’ புயல் மீண்டும் வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தமிழக பகுதிகளை கடந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ‘கஜா’ புயல், தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து கேரளா பகுதிகளை தாண்டி தற்போது மீண்டும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைகொண்டு உள்ளது.

இது அடுத்து வரும் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும்.

இதனால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு நேரடி பாதிப்பு கிடையாது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...