புயல் பாதித்த பகுதிகளில் ஓரிரு தினங்களில் நிலைமை சீரடையும்; துணை முதல் அமைச்சர் பேட்டி


புயல் பாதித்த பகுதிகளில் ஓரிரு தினங்களில் நிலைமை சீரடையும்; துணை முதல் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2018 7:32 AM GMT (Updated: 18 Nov 2018 7:32 AM GMT)

புயல் பாதித்த பகுதிகளில் ஓரிரு தினங்களில் நிலைமை சீரடையும் என துணை முதல் அமைச்சர் நாகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நாகை,

வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது.  இதனால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், நாகையில் நிவாரண பணிகளை ஆய்வு செய்ய சென்றுள்ள துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 216 ரேஷன் கடைகளில், காலை முதல் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நிவாரண பொருட்களை கொண்டு செல்லவும், விநியோகிக்கவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

கிராம பகுதிகளின் உட்புற சாலைகளை சீர்செய்யும் பணி முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.  தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

2, 3 நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு கிடைத்து விடும்.  சேத விவரங்களை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும்.

நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  ஓரிரு தினங்களில் நிலைமை சீரடையும்.  புதிய மின்கம்பங்களை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

டீசல், பெட்ரோல் கிடைக்காத பகுதிகளுக்கு அவற்றை அனுப்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது.  இதற்காக இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

புயல் பாதித்த பகுதிகளில் ஓரிரு தினங்களில் நிலைமை சீரடையும்.  சென்னையில் முதல் அமைச்சர் தலைமையில் நாளை ஆய்வு கூட்டம் நடைபெறும் என கூறினார்.

Next Story