மோடி ஆட்சியை அகற்ற மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி


மோடி ஆட்சியை அகற்ற மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 11 Dec 2018 11:59 PM GMT (Updated: 11 Dec 2018 11:59 PM GMT)

‘மோடி ஆட்சியை அகற்ற மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும்’ என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, 

டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய நாட்டில் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் நிலவரங்களைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அலசி, ஆராயப்பட்டது. குறிப்பாக பா.ஜ.க. ஆட்சியை பொறுத்தவரையில், பா.ஜ.க. ஆட்சியாக மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாகவும் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு செய்தி வந்தது, ரிசர்வ் வங்கியினுடைய கவர்னர் ராஜினாமா செய்திருப்பதாக. ஏற்கனவே, இதே மோடி ஆட்சியில், அதாவது இப்போது ராஜினாமா செய்து இருப்பதோடு சேர்த்து 2 ரிசர்வ் வங்கியினுடைய கவர்னர்கள் ராஜினாமா செய்துள்ளார்கள். ஏற்கனவே தமிழகத்தைச் சார்ந்த ரகுராம் ராஜன் ராஜினாமா செய்தது நாட்டிற்கு தெரியும்.

அதைத் தொடர்ந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்திருக்கிறார். ஆகவே, இந்த மோடி ஆட்சியில் ரிசர்வ் வங்கியினுடைய கவர்னர்களே ராஜினாமா செய்யக்கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த ஆட்சியினுடைய நிலையைப் பற்றி நாடு நன்றாக புரிந்து கொண்டிருக்கிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி பேதங்களை மறந்து நமக்குள் இருக்கக்கூடிய சிறுசிறு பிரச்சினைகள் மனஸ்தாபங்கள் எதுவாக இருந்தாலும் அவைகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு மத்தியிலே ஒரு பாசிச ஆட்சி மதவெறி பிடித்து இருக்கக்கூடிய ஒரு ஆட்சி மோடி தலைமையில் நடந்து கொண்டிருப்பதை நாம் உணர்ந்து பார்த்து அந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.

அதற்கான முயற்சியில் முழுமையாக ஒரு மெகா கூட்டணி அமைத்து நாம் போராட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் என்னுடைய கருத்துக்களை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– மேகதாது அணை தொடர்பாக சோனியாகாந்தியிடம் ஏதாவது கோரிக்கை வைத்தீர்களா?.

பதில்:– டெல்லியில் சோனியாகாந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்த நேரத்திலேயே இதுபற்றி நான் பேசினேன். அவர்களும் சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய முதல்–மந்திரியிடம் பேசுவதாக என்னிடத்திலே உறுதி தந்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்தபோதும் இது பற்றி நான் பேசியிருக்கிறேன்.

கேள்வி:– 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசும், கவர்னரும் தாமதம் செய்கிறார்கள். தர்மபுரி பஸ் எரிப்பில் மூவரின் விடுதலையில் காட்டிய அக்கறை இந்த 7 பேரின் விடுதலை மீது காட்டாதது ஏன்?.

பதில்:– நீங்களே அதற்கு விளக்கம் சொல்லி விட்டீர்கள் அதுதான் பதில்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story