நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 13 Jan 2019 7:45 AM GMT (Updated: 13 Jan 2019 9:00 AM GMT)

நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. சார்பில் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற மூன்று முழக்கங்களை முன்வைத்து கடந்த புதன்கிழமை தொடங்கி பிப்ரவரி மாதம் 17ந்தேதி வரை ஊராட்சி சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் உரையாடி பேசினார்.

இதில், தலைவரை ஈன்றெடுத்த திருவாரூர் தொகுதியில் நான் என் பரப்புரையை தொடங்குகிறேன்.  காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தாமல் திருவாரூருக்கு மட்டும் நடத்த இருந்தது ஏன்? என்று தெரியவில்லை. திருவாரூர் தேர்தல் மூலம் மோடி பல்ஸ் பார்க்க நினைத்தார்.

234 தொகுதிகளில் 12,516 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கஜா புயல் பாதித்த போது உடனடியாக தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கினோம். நிவாரண பொருட்களை நேரில் சென்று கொடுத்து ஆறுதல் கூறினோம். ஆனால் அ.தி.மு.க. அரசு முழுமையான அளவில் நிவாரணம் வழங்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது.

தி.மு.க. ஆட்சியில் இருப்பதாக நினைத்து கொண்டு நீங்கள் உங்கள் கோரிக்கைகளை என்னிடம் கூறியுள்ளீர்கள். மீண்டும் தி.மு.க தான் ஆட்சிக்கு வரும் என்று எங்களை விட நீங்கள் தான் அதிக நம்பிக்கை வைத்துள்ளீர்கள், உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நாங்கள் திகழ்வோம் என்று பேசினார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Next Story