நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்கு எப்படி? அ.தி.மு.க., தி.மு.க. அணிகள் குறித்து பரபரப்பு தகவல்கள்


நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்கு எப்படி? அ.தி.மு.க., தி.மு.க. அணிகள் குறித்து பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 13 Jan 2019 11:45 PM GMT (Updated: 13 Jan 2019 10:28 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்கு குறித்தும், அ.தி.மு.க. - தி.மு.க. அணிகள் குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

எந்தவொரு அரசியல் கட்சியும் தொடங்கப்படும்போது, தங்களுக்கு என்று தனி கொள்கை, கோட்பாடுகளை முன்னிறுத்துவது வழக்கம். ஆனால், தேர்தல் என்று வரும்போது, அவற்றை மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஆட்சி அதிகாரம் ஒன்றையே மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கி விடுகின்றன. இதற்கு, முன்பு நடந்த தேர்தல்களே சாட்சியாக இருக்கின்றன.

நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கின்றன. மத்தியில் ஆளும்கட்சியான பா.ஜ.க.வும், இதற்கு முன்பு ஆண்ட கட்சியான காங்கிரசும் எதிரும்... புதிருமாக மல்லுக்கட்ட இருக்கின்றன. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இரு கட்சிகளும் கூட்டணி கணக்குகளையும் போடத் தொடங்கிவிட்டன.

பா.ஜ.க. - காங்கிரஸ் ஆகியவை தேசிய கட்சிகளாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. - தி.மு.க. என்ற 2 மாநில கட்சிகளையே நம்பி இருக்கிறது. இங்கே அ.தி.மு.க. - தி.மு.க. தான் கூட்டணி கணக்குகளை போட்டு வருகின்றன. ஆளுமைமிக்க தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. இப்போதே கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளும், அவற்றுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையும் ஓரளவு உறுதியாகிவிட்டன. பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டணி நிலவரங்கள் வெளிச்சத்துக்கு வர இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் 20-20 என்ற விகிதாச்சாரத்தில் பிரித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேற்கொண்டு இந்த கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு பா.ஜ.க. தன்னிடம் உள்ள 20 தொகுதிகளை பகிர்ந்து வழங்க இருக்கிறது. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் ஆகியவை இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க.விடம் உள்ள 20 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 6 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்பட இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இந்த 4 கட்சிகளும் பா.ஜ.க. சின்னமான ‘தாமரை’யில் தான் போட்டியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை மேலும் வலுப்படுத்த தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்சிகள் இணையும் பட்சத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் வழங்கப்படும். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் இணைந்தால், புதுச்சேரி தொகுதி அந்த கட்சிக்கு வழங்கப்படும். அவ்வாறு இணையாத பட்சத்தில் புதுச்சேரி தொகுதி பா.ம.க.வுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்குகின்றன. மெகா கூட்டணியாக அமையும் இந்த கூட்டணியில், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இப்போதைக்கு இருக்கின்றன.

இந்த கூட்டணியை பொறுத்தவரை, தி.மு.க. 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. ம.தி.மு.க. கூடுதல் தொகுதிகள் கேட்டு வலியுறுத்தினால், மேலும் ஒரு தொகுதி வழங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க.வும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அவ்வாறு இணையும் பட்சத்தில், தி.மு.க. தனது தொகுதிகளை குறைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட இருக்கிறது.

அதேநேரத்தில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து விடப்பட்டதாகவே தெரிகிறது. நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சியை தொடங்கவில்லை என்றாலும், அவரது ஆதரவை பெற பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.

எது எப்படியோ, இதுவரை ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டவர்கள் கூட, நாடாளுமன்ற தேர்தலில் கைகோர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் அரசியல் என்பதை, “அரசியல்ல.. இதெல்லாம் சாதாரணமப்பா..” என்ற கவுண்டமணியின் சினிமா வசனம் தான் மீண்டும் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

Next Story