கல்வி கடனை தள்ளுபடி செய்வோம்; மு.க. ஸ்டாலின் பேச்சு


கல்வி கடனை தள்ளுபடி செய்வோம்; மு.க. ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2019 1:32 PM GMT (Updated: 25 Feb 2019 1:32 PM GMT)

மத்தியில் தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தூத்துக்குடி,

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.  இதற்கான அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  தமிழகத்தில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார்.  அங்கு பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறியும் அவர் மக்களிடையே பேசியும் வருகிறார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்ற அவர், அங்கு இன்று நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  இதில், நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல, சட்டசபை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என பேசினார்.

இதன்பின் தூத்துக்குடியின் வேம்பார் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.  இதில் அவர் பேசும்பொழுது, தி.மு.க. கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் குறைகளை கேட்கும் கட்சி.  தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து உள்ளிட்ட மக்களுக்கு பயனுள்ள நல்ல திட்டங்கள் இடம்பெறும்.  மத்தியில் தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என பேசினார்.

Next Story