தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது


தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
x
தினத்தந்தி 19 March 2019 4:42 AM GMT (Updated: 19 March 2019 5:06 AM GMT)

தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் தேர்தல்  வாக்கு பதிவு  ஏப்ரல் 18 ந்தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும். வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24-ந் தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

Next Story