8 வழிச்சாலை திட்ட பாதிப்பு குறித்து நிதின் கட்காரிக்கு புரிய வைப்போம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை


8 வழிச்சாலை திட்ட பாதிப்பு குறித்து நிதின் கட்காரிக்கு புரிய வைப்போம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 15 April 2019 9:00 PM GMT (Updated: 15 April 2019 8:43 PM GMT)

8 வழிச்சாலை திட்ட பாதிப்பு குறித்து நிதின் கட்காரிக்கு புரிய வைப்போம் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் கூட்டத்தில் பேசிய நிதின் கட்காரி மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி என்ற அடிப்படையில் தான் 8 வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். தமிழக மக்களிடையே அத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருவதை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவர் கூறிவிட்டார் என்பதாலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடாது. அதுமட்டுமின்றி, 8 வழிச்சாலைத் திட்டம் குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும்; அது அரசின் கடமை என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். மாநில அரசின் ஒத்துழைப்பும், ஆதரவும் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவது சாத்தியமல்ல.

மேலும், 8 வழிச்சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி அது தேவையில்லை என்பதை நிதின் கட்காரிக்கு புரிய வைப்போம். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நிதின் கட்காரியின் அறிவிப்பை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேடையிலேயே தடுத்து நிறுத்தாதது ஏன்? என்று கூறி வழக்கம் போலவே தடித்த வார்த்தைகளில் விமர்சித்துள்ளார். ஒரு மேடையில் ஒரு கட்சியின் தலைவர் பேசும்போது அதில் குறுக்கிடாமல் இருப்பது தான் மேடை நாகரிகமாகும். இந்தியாவில் எங்கும் ஒரு கட்சித் தலைவரின் பேச்சை இன்னொரு கட்சித் தலைவர் தடுத்து நிறுத்துவது நடக்காது.

1½ லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேவை சந்தித்து, எமது சொந்தங்களை இனப்படுகொலை செய்தது ஏன்? என்று கேள்வி கேட்காமல், மேடை நாகரிகம் என்ற பெயரில் அவர் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பெட்டியை வாங்கி வந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு இதுபற்றி பேச தகுதி இல்லை. 8 வழிச்சாலைத் திட்டத்தில் விவசாயிகளை காட்டிக் கொடுத்த மு.க.ஸ்டாலினுக்கு இதுபற்றி பேச அருகதை இல்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் ராகுல் கூறுகிறார். ஸ்டாலினுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்திருந்தால் ராகுல் காந்தியை கண்டித்திருக்க வேண்டும். அதை அவர் செய்தாரா?. 8 வழிச்சாலைத் திட்டத்தை தடுத்து, 5 மாவட்ட விவசாயிகளின் நலன்களை பா.ம.க. பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story