தமிழகத்தின் சில இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தின் சில இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
x

தமிழகத்தின் சில இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் ‘கத்திரி’ வெயில் காலம் முடிந்த பின்னரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் அளவு குறையவில்லை. சென்னையில் இயல்பான அளவை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி கூடுதலாக வெப்பம் நிலவியது. பகலில் அனல் காற்று வீசியது.

தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை ஒருபுறமும், வெப்பத்தின் தாக்கம் மறுபுறமும் மக்களை வாட்டி வதைத்தது. வெப்பச் சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தாக்கத்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவியது. தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விடுபட மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தன. எப்போது மழை பெய்யும்? என்று சென்னை மக்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் நேற்று காலை பொழுது மேகமூட்டத்துடன் விடிந்தது. மதியம் லேசாக வெயில் எட்டி பார்க்க தொடங்கியது. மதியம் 3 மணிக்கு மேல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் தூறல் விழ தொடங்கியது. இதனால், வெப்பம் தணிந்ததால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.

கனமழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில், தமிழகத்தின் சில இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடக்கு , தெற்கு வங்க கடல், லட்சத்திவு கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்” என தெரிவித்துள்ளது. 

Next Story