மாநில செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நடந்த நடிகர் சங்க தேர்தல் நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர் கமல்ஹாசன், விஜய், சூர்யா வாக்களித்தனர் + "||" + With strong police protection, Actor Association election Kamal Haasan, Vijay and Surya voted

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நடந்த நடிகர் சங்க தேர்தல் நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர் கமல்ஹாசன், விஜய், சூர்யா வாக்களித்தனர்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நடந்த நடிகர் சங்க தேர்தல் நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர்  கமல்ஹாசன், விஜய், சூர்யா வாக்களித்தனர்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர். கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.
சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டு களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.

2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்ற விஷாலின் பாண்டவர் அணியின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.


கடந்த மாதம் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்ம நாபனை நியமித்து தேர்தல் பணிகளை தொடங்கினர். 23-ந்தேதி (நேற்று) சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்- ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஏற்கனவே பதவியில் இருந்த விஷாலின் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸும் மீண்டும் போட்டியிட்டனர். இன்னொரு துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகனை நிறுத்தினர்.

இந்த அணி சார்பில் குஷ்பு, லதா, பிரசன்னா, சிபிராஜ், ராஜேஷ், சரவணன், கோவை சரளா, மனோபாலா உள்பட 24 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர்.

இவர்களை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த், துணைத்தலைவர் பதவிகளுக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதே அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பரத், சின்னி ஜெயந்த், காயத்ரி ரகுராம், நிதின் சத்யா, பூர்ணிமா ஜெயராம், பாண்டியராஜன், கே.ராஜன், கே.எஸ்.ரவிக்குமார், சங்கீதா, ஷாம் உள்ளிட்ட பலர் களம் இறங்கினர். இரு அணியினரும் ஆதரவு திரட்டி வந்த நிலையில் எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீஸ் அனுமதி மறுத்தது.

இதற்கிடையே, தங்கள் வாக்குரிமையை பறித்து விட்டதாக 61 உறுப்பினர்கள் புகார் செய்ததன் பேரில் சங்க பதிவாளரும் தேர்தலை நிறுத்தினார். இதனால் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற பரபரப்பு நிலவி வந்த நிலையில் தேர்தலுக்கு பதிவாளர் விதித்த தடையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் திட்டமிட்ட தேதியில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி நேற்று புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது.

பள்ளியை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அடையாள அட்டை வைத்திருந்த நடிகர் நடிகைகளை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். நடிகர்- நடிகைகள் வாக்குச்சாவடிக்கு செல்ல தனி பாதைகளையும் அமைத்து இருந்தனர். இரு அணி வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் பாதையில் திரண்டு நின்று வாக்களிக்க வந்தவர்களிடம் தங்களுக்கு ஓட்டு போடுமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

நிர்வாகிகள் பதவிகளுக்கும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தனித்தனி வாக்குப்பெட்டிகள் வைத்து இருந்தனர். ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு நிறங்களில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றில் பிடித்த வேட்பாளர்கள் பெயர்களில் நடிகர்-நடிகைகள் முத்திரையை பதிவு செய்து வாக்கு பெட்டியில் செலுத்தினர்.

நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், பிரபு, நாசர், பாக்யராஜ், ஆர்யா, பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விஜயகுமார், ஐசரி கணேஷ், ஆதி, பாண்டியராஜன், ஸ்ரீகாந்த், விவேக், பிரகாஷ்ராஜ், கராத்தே தியாகராஜன், நடிகைகள் கே.ஆர். விஜயா, குஷ்பு, சுஹாசினி, வெண்ணிற ஆடை நிர்மலா, மீனா, வைஜெயந்திமாலா, நளினி, அம்பிகா, ராதா, பூர்ணிமா பாக்யராஜ், சோனா, ரோகினி, வசுந்தரா, விந்தியா, சச்சு ஆகியோர் ஓட்டு போட்டனர்.

மேலும் வாக்களித்த முக்கிய நடிகர்-நடிகைகள் விவரம் வருமாறு:-
மன்சூர் அலிகான், மயில்சாமி, சந்தானம், அருண்பாண்டியன், நகுல், எஸ்.ஜே.சூர்யா, பொன்வண்ணன், வின்சென்ட் அசோகன், விக்ராந்த், சின்னி ஜெயந்த, சார்லி, சுந்தர்.சி, சாந்தனு, ராம்கி, செந்தில், ஏ.வெங்கடேஷ், போஸ் வெங்கட், ஜாகுவார் தங்கம், டி.சிவா, கலையரசன், ரஞ்சித், கயல் சந்திரன், ரகுமான், ஓ.ஏ.கே.சுந்தர், தியாகு, பாபு கணேஷ்

விசு, கும்கி அஸ்வின், வைபவ், பிளாக்பாண்டி, ஹரிஷ் கல்யாண், வெண்ணிற ஆடை மூர்த்தி, சிங்கமுத்து, சக்தி, சரத்பாபு, சந்தான பாரதி, இளவரசு, விஜய்பாபு, கஞ்சா கருப்பு, ஆர்.கே.சுரேஷ், கவுண்டமணி, விக்ராந்த், ஆர்.சுந்தரராஜன், நிரோஷா, பசிசத்யா, சஞ்சனா சிங், லலிதகுமாரி, நித்யா, விஜயகுமாரி, ஜெயபாரதி, கலா ரஞ்சனி, சச்சு, எம்.என்.ராஜம், கே.ஆர்.வத்சலா, ராகசுதா, மும்தாஜ், ஷகிலா, நீலிமா, ரித்விகா.

தபால் ஓட்டுகளையும் சேர்த்து நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுபோட தகுதி பெற்றவர்கள் 3,173 பேர் ஆவார்கள். ரஜினிகாந்த் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தபாலில் வாக்கு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.

மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 1604 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. தபால் ஓட்டுகள் நீங்கலாக மொத்த வாக்குகளில் 50.55 சதவீத வாக்குகள் பதிவாயின.

ஓட்டு பதிவு முடிந்ததும் வாக்கு சீட்டுகள் இருந்த 12 ஓட்டுப் பெட்டிகளும் தேர்தல் அதிகாரி முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்டன. பின்னர் அவை போலீஸ் பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

ஓட்டு எண்ணும் தேதியை பிறகு அறிவிப்பதாக ஐகோர்ட்டு கூறி உள்ளதால் நேற்று வாக்குகள் எண்ணப் படவில்லை. ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
1970, 80-களில் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமை காலங்கள், உதய கீதம், இதய கோயில் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருந்த மோகன், நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க காலை 11 மணிக்கு வந்தார். வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது அவர் பெயரில் உள்ள வாக்கு ஏற்கனவே பதிவாகி இருந்தது.

அதை பார்த்து மோகன் அதிர்ச்சியானார். “எனது வாக்கை கள்ள ஓட்டு போட்டது யார்?” என்று வாக்குச்சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் ஓட்டு போடாமல் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றார்.

நடிகர் விஜய் ஓட்டுப்போட காரில் வந்து இறங்கியதும் அங்கு நின்ற கூட்டத்தினர் அவரை மொய்த்தனர். கேமராமேன்கள் மற்றும் போட்டோகிராபர்களும் படம் எடுக்க சூழ்ந்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. விஜய் கூட்டத்தின் மத்தியில் சிக்கினார்.

போலீசார் விரைந்து வந்து விஜய்யை பாதுகாப்பாக அழைத்துச்சென்று ஓட்டுப்போட வைத்துவிட்டு வெளியே அழைத்து வந்து காரில் ஏற்றி அனுப்பினர்.

நடிகர் ஆர்யா ஓட்டுப்போட சைக்கிளில் வந்தார். போலீசாருக்கு அவரை அடையாளம் தெரியாததால் உள்ளே அனுமதிக்காமல் தடுத்தனர்.

பின்னர் அடையாள அட்டையை காட்டி தன்னை ஆர்யா என்று விளக்கிய பிறகு பள்ளி வளாகத்துக்குள் அனுமதித்தனர். அங்கு ஓட்டு போட்டுவிட்டு சைக்கிளிலேயே திரும்பிச் சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருக்கிறார். அவருக்கு தபால் வாக்குச்சீட்டு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க முடியவில்லை. இதற்காக வருத்தம் தெரிவித்து இருந்தார்.

அஜித்குமார், ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ராதிகா, ஜோதிகா, நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, சிம்ரன், ஓவியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் ஓட்டுப்போடவில்லை.

நடிகர் சங்க தேர்தலை நடத்த விடக்கூடாது என்றும், ஓட்டுப்போட வருபவர்களை அடித்துவிரட்ட வேண்டும் என்றும் ஒருவர் பேசிய ஆடியோ நேற்று அதிகாலையில் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் தேர்தலில் வன்முறை ஏற்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்த புனித எப்பாஸ் பள்ளியை சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அடையாள அட்டையை சரிபார்த்தே ஒவ்வொருவரையும் பள்ளிக்குள் அனுமதித்தனர். கூட்டமாக நிற்பவர்களையும் கலைத்து அப்புறப்படுத்தினர்.

ஓட்டுப்போட வந்த நடிகர், நடிகைகளிடம் ஆதரவு திரட்ட பாண்டவர் அணியினரும், சுவாமி சங்கரதாஸ் அணியினரும் திரண்டு நின்றனர். அப்போது வேறு சிலரும் அங்கு வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

இரு அணியின் ஆதரவாளர்களும் துண்டு பிரசுரங்கள் கொடுத்தபோது வாக்குவாதமும், மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உருவானது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் அறிமுகமாகி கலைமாமணி விருது பெற்ற கொல்லங்குடி கருப்பாயி நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க சிவகங்கையில் இருந்து வந்து இருந்தார். ஆனால் அவருக்கு ஓட்டு இல்லை என்று வாக்குச்சாவடி ஊழியர்கள் கூறிவிட்டனர்.

இதனால் வருத்தமான கொல்லங்குடி கருப்பாயி கூறும்போது, “தேர்தலில் ஓட்டுப்போட வரும்படி இரண்டு அணியினரும் கடிதம் அனுப்பினார்கள். இங்கு வந்தபிறகு எனக்கு ஓட்டு இல்லை என்று முகத்தில் கரிபூசி விட்டனர். விஷால் எனக்கு உறுப்பினர் கார்டு வாங்கி கொடுத்தார். அதை காட்டியும் ஓட்டு போடவிடவில்லை” என்றார்.