தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கைக்காக ‘தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்’ - உதயநிதி ஸ்டாலின் பேட்டி


தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கைக்காக ‘தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்’ - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 6 July 2019 11:00 PM GMT (Updated: 6 July 2019 11:00 PM GMT)

தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கைக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, 

தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ந் தேதி நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற பின் அவரது தலைமையில் இளைஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்களின் முதல் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஆர்.டி.சேகர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.ஜோயல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்கள் பிரபாகர் ராஜா, சிற்றரசு, பிரேம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட அமைப்பாளர்கள் அனைவரும் தங்களை தாங்களே அறிமுகம் செய்து கொண்டதுடன் இளைஞர் அணி செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்த போதும், தற்போது அந்த உதயநிதி ஸ்டாலின் இருக்கும் போதும் மாவட்ட அமைப்பாளராக பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

மேலும், தங்கள் பகுதிகளில் செயல்படாமல் இருக்கும் இளைஞர் அணி பொறுப்பாளர்களை களை எடுக்கவும் கோரிக்கை விடுத்ததோடு, உறுப்பினர் சேர்க்கையில் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது.

அதைத் தொடர்ந்து அமைப்பாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்துவதற்காக, மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது போன்று தானும் தமிழகத்தில் தனது கால்கள் படாத தெருக்கள் இல்லாத அளவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கருணாநிதி இளைஞர் அணியில் இருந்து உழைத்து எப்படி அண்ணாவை முதல்வராக்கினாரோ? கருணாநிதி முதல்வராவதற்கு மு.க.ஸ்டாலின் எவ்வாறு உழைத்தாரோ? அதேபோன்று மு.க.ஸ்டாலின் முதல்வராவதற்கு உதயநிதி ஸ்டாலின் வேலை செய்வேன். நான் மிகவும் பொறுமைசாலி என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. கட்சி பணிகளை சரிவர செய்யாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதாகவும் இளைஞர் அணி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

உதயநிதி ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:-

இளைஞர் அணி அமைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அவர்களது கோரிக்கைகள், என்னிடம் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்து மனம் விட்டு பேசி இருக்கிறோம். இது மிகவும் சிறப்பான ஒரு அனுபவமாக எனக்கு இருந்தது. அவர்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக எனது செயல்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படும்.

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தான் எங்கள் முக்கிய நோக்கம். அதற்கு ஒரு இலக்கு மற்றும் கால வரையறை வழங்கி இருக்கிறேன். அதற்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். சுற்றுப்பயண தேதி பின்னர் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story