தமிழகம்-சீனா இடையே கலாசார, வர்த்தக உறவு பிரதமர் மோடி பேச்சு


தமிழகம்-சீனா இடையே கலாசார, வர்த்தக உறவு பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 13 Oct 2019 12:00 AM GMT (Updated: 12 Oct 2019 9:30 PM GMT)

தமிழகத்துக்கும், சீனாவுக்கும் இடையே கலாசார, வர்த்தக உறவு இருந்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

சென்னை,

சென்னையை அடுத்த கோவளத்தில் இந்தியா-சீனா இடையே நேற்று நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

வர்த்தக உறவு

சீனாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே ஆழமான கலாசார மற்றும் வர்த்தக ரீதியிலான உறவுகள் இருந்து வருகிறது. கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில், இந்தியா மற்றும் சீனா பொருளாதார வல்லரசாக விளங்கியுள்ளன. கடந்த ஆண்டு சீனா வந்த நான் வுகான் நகரில் நடந்த முதலாவது முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்றேன்.

அப்போது நடந்த பேச்சுவார்த்தை, இரு நாட்டு உறவுக்குள் புதிய உத்வேகத்தை அளிப்பதாக இருந்தது. இந்த நல்லுறவு மேலும் முன்னேற்றம் பெற வேண்டும். இரு நாடுகளின் ராஜதந்திர உறவுகள் இன்னும் பலப்பட வேண்டும். அதற்கு இந்த சந்திப்பு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

இந்தியா-சீனா இடையேயான சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு பரஸ்பர ஒத்துழைப்பு அவசியமாகும். அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் சென்னையில் இந்த சந்திப்பு நடந்து உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான நட்பின் வாசலாக மாமல்லபுரம் மாறி இருக்கிறது. புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறது.



சக்தி வாய்ந்த நாடுகள்

நாங்கள் வேறுபாடுகளை கிளப்பாமலும், அவை ஒரு பிரச்சினையாக உருவெடுக்காமலும் இருக்கும்படி, கவனமுடன் கையாள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். உலகளாவிய மற்றும் இருதரப்பினரிடையே உள்ள பிரச்சினைகளை உணர்ந்து செயல்படுவதோடு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, உலக அமைதி மற்றும் உறுதித்தன்மைக்கு பங்களிப்பதாக அமையும்.

சர்வதேச அளவிலான பிரச்சினைகளில், யோசனைகளை பரிமாறக்கூடிய வகையில் மாநாடு அமைந்து உள்ளது. இந்தியாவும், சீனாவும் 100 கோடி மக்கள்தொகையை தாண்டிய நாடுகளாகும். உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக இரு நாடுகளும் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மித்த கருத்து பரிமாற்றம் இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் இரு நாடுகளின் உறவும், ஒருங்கிணைப்பும் மேலும் வலுப்படும். அதற்கு நாம் வழிகாண வேண்டும்.

புதிய சகாப்தம்

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளின் வருகை எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. பல புதிய விஷயங்களில் தெளிவு கிடைத்து உள்ளது. அந்த வகையில் இந்த சந்திப்பு புதிய சகாப்தத்தை படைத்து இருக்கிறது. இரு தரப்பு உறவு, தகவல் தொடர்பு மேம்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் இந்த நட்பு நீடிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தனது பேச்சை தமிழில் தொடங்கிய மோடி, பெரும்பாலும் இந்தியிலேயே உரையாற்றினார். இடையில் ஆங்கிலத்திலும் பேசினார்.

Next Story