கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு


கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 29 Nov 2019 11:30 PM GMT (Updated: 29 Nov 2019 10:26 PM GMT)

அதிக அளவில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை, 

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்னை கோயம்பேட்டில் மூன்றாம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலை வகித்தார்.

விழா மலரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். விழாவில், அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமை செயலாளர் க.சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் த.ந.ஹரிஹரன் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சென்னை மாநகரில் அதிகரித்து வரும் தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து நீர் வழங்கும் பொருட்டு, கோயம்பேடு மற்றும் கொடுங்கையூர் பகுதியில் தலா 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முறையே 2012-13 மற்றும் 2014-15-ம் ஆண்டுகளில் சட்டசபை விதி 110-ன் கீழ் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, இந்தியாவிலேயே மிகப்பெரிய மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை கடந்த அக்டோபர் 1-ந் தேதி கொடுங்கையூரில் நான் தொடங்கி வைத்தேன். இதன் மூலம் வடசென்னை, மணலியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, 486 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இங்கு(கோயம்பேடு) நான் தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம் வடசென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக தற்பொழுது தினசரி வழங்கப்பட்டு வரும் 40 மில்லியன் லிட்டர் நன்னீருக்குப் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்பட உள்ளது.

இவ்விரு நிலையங்கள் முழுமையாக செயல்படுவதன் மூலம் சென்னை மாநகரில் மொத்தமாக உருவாகும் கழிவுநீரில் 20 சதவீதம் அளவிற்கு மறுசுழற்சி செய்யப்படும். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகபட்சமாக கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழும்.

தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நன்னீர் இனிமேல் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும். இதனுடன் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்களின் மூலம் சென்னை நகருக்கு பருவமழை பொய்த்தாலும், தொடர்ந்து குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும்.

நன்னீரைப் பாதுகாக்கும் பொருட்டு, கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவதற்கான இதுபோன்ற திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தும். நதி நீர், கழிவு நீர், குடிநீர் என அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டது அ.தி.மு.க. அரசுதான் என்பதை பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.

கழிவுநீர் இணைப்பு பெறுவதை எளிமைப்படுத்தும் வகையில் ‘அழைத்தால் இணைப்பு’ மற்றும் ‘இல்லந்தோறும் இணைப்பு’ ஆகிய 2 திட்டங்கள் வருகிற டிசம்பர் 2-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலையை பார்வையிட்டார். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடித்து பார்த்தார். 

Next Story