சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாதவர் செல்வாக்கு பற்றி பேசுவது பெரிய நகைச்சுவை; மு.க.ஸ்டாலின்


சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாதவர் செல்வாக்கு பற்றி பேசுவது பெரிய நகைச்சுவை; மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 28 Dec 2019 12:07 PM GMT (Updated: 28 Dec 2019 12:07 PM GMT)

சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாத முதல் அமைச்சர், செல்வாக்கு பற்றி பேசுவது பெரிய நகைச்சுவை என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நல்லாட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு  முதலிடம் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தமிழகத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து மத்திய அரசு வழங்கி உள்ளது. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி இது.

தமிழகம் முதலிடம் பெற உழைத்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி.  தமிழக அரசை குறை கூறுவதுதான் மு.க. ஸ்டாலினின் வழக்கம்.  மத்தியில் காங்கிரஸ் இருந்தபோதும், மாநிலத்தில் தி.மு.க. அரசு இருந்தபோதும் என்.பி.ஆர். கொண்டு வரப்பட்டது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு மட்டுமே பின்பற்றப்படுகிறது. தேசிய குடியுரிமை பதிவேடு பயன்படுத்தப்படாது என மத்திய அரசு தெளிவாக கூறி உள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மக்களை குழப்புகிறார்கள்.  செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கின்றன என கூறினார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் முதல் அமைச்சர் கண்களை மறைத்திருக்கிறது.

சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாத முதல் அமைச்சர், செல்வாக்கு பற்றி பேசுவது பெரிய நகைச்சுவை. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக போராடும் இந்தியர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளனர்.  சிறுமைப்படுத்தி உள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள பதிவேட்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளது.  காங்கிரஸ் ஆட்சியின் போது குடியிருப்புகளை அடிப்படையாக கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  அதற்கு எதிர்ப்பு வந்ததும் கைவிடப்பட்டது.  ஆனால் மத ரீதியாக பிளவை ஏற்படுத்தவே, தற்போது தேசிய குடியுரிமை பதிவேடு  உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை பதிவேடுக்கும், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று பத்திரிகைகள் சிறப்பு கட்டுரை எழுதிய பின்னும் அவற்றிற்கு இடையே சம்பந்தம் இல்லை என்று முதலமைச்சர் பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story