உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது  -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 27 Jan 2020 5:30 AM GMT (Updated: 2020-01-27T11:00:40+05:30)

உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களையொட்டி  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அப்பகுதிகளில் விதித்தது. பாதுகாப்புக்காக ராணுவ வீரர்களை அப்பகுதியில் அதிக அளவில் நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்களையும் தடுப்புக் காவலில் வைத்தனர்.

காஷ்மீரில் உள்ள ஶ்ரீநகர் பகுதியில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நீண்ட தாடியுடன் இருக்கும் உமர் அப்துல்லாவின் புகைப்படம் சமூக  வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

அவர் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-

“உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது. ஃபாரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட பிற காஷ்மீர் தலைவர்கள் உரிய நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை மத்திய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story