மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது


மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 16 Feb 2020 10:00 PM GMT (Updated: 16 Feb 2020 6:06 PM GMT)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. கூட்டத்தில், உள்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

சென்னை, 

தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் வரும் 21-ந் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கின்றன. முதலில் கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல், அடுத்து பேரூர் கழகம், மாநகர, வட்டக் கழக தேர்தல்கள், ஒன்றிய, நகர, மாநகர பகுதி தேர்தல்கள் என தொடர்ந்து நடக்க இருக்கின்றன.

பின்னர், மாநகர கழக தேர்தல் நடக்கிறது. மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைக் கழக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களே தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு, பொதுக்குழு கூடி தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஆனால், உள்கட்சி தேர்தல் பணிகள் தொடங்கிய போதே கட்சி தலைமைக்கு பல்வேறு புகார்கள் வரத் தொடங்கின. உறுப்பினர் சீட்டுகள் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பொதுச் செயலாளர் க.அன்பழகன் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தார். தவறு செய்தவர்கள் கட்சி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்றும் கடிந்து கொண்டார்.

இந்த நிலையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். உள்கட்சி தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகள் என்ன?, நிறைவேற்றப்படாத அரசு திட்டங்கள் என்ன?, மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பது குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் அறிக்கையாக பெறப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் தி.மு.க. இப்போதே தயாராக தொடங்கி இருப்பது தெரியவருகிறது.

Next Story