பழைய சாலையை தோண்டி எடுக்காமல் புதிய சாலைகள் அமைப்பது ஏன்? - அதிகாரிகள் நேரில் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


பழைய சாலையை தோண்டி எடுக்காமல் புதிய சாலைகள் அமைப்பது ஏன்? - அதிகாரிகள் நேரில் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Feb 2020 10:45 PM GMT (Updated: 26 Feb 2020 10:22 PM GMT)

பழைய சாலையை தோண்டி எடுக்காமல் புதிய சாலைகள் அமைப்பது ஏன்? என்பது குறித்து அதிகாரிகள் நாளை(வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல மனுவில், ‘மயிலாடுதுறை, பட்டமங்களம் தெருவில் புதிய சாலை அமைக்கப்படுகிறது. பழைய சாலையை தோண்டி எடுக்காமல், அதற்கு மேல் புதிய சாலைகளை அமைக்கின்றனர். இதனால், சாலையின் உயரம் உயர்ந்து, வீடுகள் எல்லாம் தாழ்ந்து விடுகிறது. மழை காலங்களில் தண்ணீர் வீடுகளுக்கு புகுந்து விடும். இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, அதிகாரிகளை நேரில் வந்து ஆய்வு செய்த பின்னர் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பழைய சாலைகளை தோண்டி எடுக்காமல், அதற்குள் மேல் புதிய சாலைகளை கண் மூடித்தனமாக போடுவதால், சாலைகள் எல்லாம் உயருகின்றன. சாலையோரம் உள்ள வீடுகள் மற்றும் பிறவகை கட்டிடங்கள் எல்லாம் பள்ளத்துக்குள் செல்கின்றன. மழை காலங்களில் வெள்ள நீர் இந்த கட்டிடங்களுக்குள் சென்று விடுகின்றன. கழிவுநீர் இணைப்பிலும் அடைப்பு ஏற்படுகின்றன.

உதாரணமாக சென்னையில் போர் நினைவுச்சின்னம் உள்ளது. 1980-களில் இதை சுற்றியிருந்த நடைமேடை 5 அடி உயரத்துக்கு இருந்தது. இந்த நடைமேடையை சிரமப்பட்டு ஏறி தான் போர் நினைவுச்சின்னத்துக்குள் செல்ல வேண்டும். ஆனால், அந்த சாலையை சீர் செய்வதாக கூறி, பழைய சாலையை தோண்டி எடுக்காமல், சாலை மேல் சாலை அமைத்து இப்போது, சாலையின் அளவு உயர்ந்துவிட்டது. போர் நினைவுச்சின்னம் கீழே சென்றுவிட்டது.

மாநிலத்தின் தலைநகரின் நிலையே இப்படி என்றால், மாநிலத்தின் பிற இடங்களின் நிலையை ஒருவரால் எளிதாக கற்பனை செய்து பார்க்க முடியும். சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள், பழைய சாலைகளை தோண்டி சீர் செய்வது இல்லை. இவர்கள் சரியாக வேலை செய்கின்றனரா? என்பதை அதிகாரிகள் மேற்பார்வையிடுவது இல்லை. இந்த அதிகாரிகளின் அலட்சிய செயல்தான், இந்த பிரச்சினையின் அடிவேராக உள்ளது.

ஏற்கனவே சிட்லப்பாக்கத்தில் இதுபோல சாலை அமைக்கப்படுவதாக கடந்த 2018-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தபோது, பழைய சாலையை தோண்டி எடுத்து புதிய சாலை அமைக்கும் பணியை மேற்பார்வையிடுவோம் என்று அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவாதத்தை முறையாக அமல்படுத்தவில்லை.

எனவே, பழைய சாலையை தோண்டி எடுக்காமல், அதற்கு மேல் புதிய சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரர்களை, கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த பிரச்சினை தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும். சாலை பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு, பழைய சாலையை தோண்டாமல் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களை பத்திரிகைகளில் அரசு விளம்பரம் செய்ய வேண்டும்.

மேலும், மாநிலம் முழுவதும் இந்த பிரச்சினை உள்ளதால், இந்த வழக்கில் மாநில நெடுஞ்சாலைத்துறை செயலாளரை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கின்றோம். பழைய சாலையை தோண்டி எடுக்காமல், அதற்கு மேல் புதிய சாலை போடுவது ஏன்? என்பது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story