காவல் துறை பயன்பாட்டுக்கு 2,271 வாகனங்கள் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்


காவல் துறை பயன்பாட்டுக்கு 2,271 வாகனங்கள் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 March 2020 12:15 AM GMT (Updated: 7 March 2020 12:02 AM GMT)

ரூ.95.58 கோடி மதிப்பீட்டில் காவல் துறையினரின் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட 2,271 வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை, 

2018-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதியன்று சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, ‘காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக கழிவு செய்யப்பட்ட 2,601 வாகனங்களுக்கு பதிலாக 1,340 எண்ணிக்கையிலான பல்வேறு வகையான வாகனங்கள் வாங்கப்படும்’ என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்புக்கிணங்க காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 510 ஜீப்கள், 20 பேருந்துகள், 100 சிறிய பேருந்துகள், 50 வேன்கள், 50 லாரிகள், 4 தண்ணீர் டேங்கர் லாரிகள், 1,506 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 2,240 வாகனங்களை கொள்முதல் செய்ய 91 கோடியே 78 லட்சத்து 86 ஆயிரத்து 560 ரூபாய் நிதி ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டு, வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

மேலும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, காவல்துறை கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டிற்காக 31 ஸ்கார்பியோ வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

அந்த வகையில், காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக மொத்தம் 95 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டிலான 2,271 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக, மோட்டார் சைக்கிள்கள், ஜீப்புகள், வேன்கள், பஸ்கள் உள்ளிட்ட 41 வாகனங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், நெடுஞ்சாலைத்துறையில் காலியாகவுள்ள 155 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு பொறியியல் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், நிலத்தடி நீரை செறிவூட்டவும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும், தமிழ்நாடு அரசு, நீர்வள ஆதாரத்துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 335 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கரூர் மாவட்டம், காவிரி வடிநிலத்திலுள்ள கட்டளை உயர்மட்ட கால்வாய் பாசன அமைப்பை புனரமைத்து மேம்படுத்தி, பாசன அமைப்பில் பாசன மேலாண்மையை திறம்பட செய்யும் பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், கரூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 185 ஏக்கர் நிலங்கள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் 3,589 ஏக்கர் நிலங்கள், என மொத்தம் 23 ஆயிரத்து 774 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும், காஞ்சீபுரம் மாவட்டம், ஒரத்தூரில் அடையாற்றுக்கு செல்லும் ஒரத்தூர் கிளை ஆற்றின் குறுக்கே புதிய நீர்தேக்கம் அமைத்தல், வடிநிலங்களுக்கு உள்ளேயே பகிர்மான கால்வாய் அமைத்து நீர் வழங்குதலை அதிகப்படுத்துதல் மற்றும் வெள்ளத் தணிப்பு செய்யும் பணி.

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியை இயற்கை சூழலுக்கு ஏற்ப புனரமைக்கும் பணி.

நீர்வள ஆதாரத்துறையில் காலியாகவுள்ள 285 உதவிப்பொறியாளர் பணியிடங்கள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டிட அமைப்பில் காலியாகவுள்ள 125 உதவிப்பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 7 பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

டெல்லியில் கடந்த பிப்ரவரி 19-ந்தேதி அன்று மத்திய நீர்பாசனம் மற்றும் எரிசக்தி வாரியத்தின் சார்பில் நடைபெற்ற நீர்பாசனம் மற்றும் எரிசக்தி தினவிழாவில், அகில இந்திய அளவில் நீர்மேலாண்மை, எரிசக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகியவற்றில் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்திய மாநிலங்கள், அமைப்புகள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

அவ்விழாவில், தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை மூலமாக அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழகத்துக்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ரத்தன்லால் கட்டாரியா விருது வழங்கினார்.

அந்த விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் க.மணிவாசன் காண்பித்து வாழ்த்து பெற்றார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story