தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வு


தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வு
x
தினத்தந்தி 26 March 2020 11:30 PM GMT (Updated: 26 March 2020 9:45 PM GMT)

தமிழகத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில், துபாயில் இருந்து தமிழகம் வந்த 24 வயது வாலிபர் திருச்சி கே.எ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், லண்டனில் இருந்து வந்த 24 வயது வாலிபர், அவருடன் இருந்த 65 வயது பெண் ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக விமான நிலையங்களில் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 15 ஆயிரத்து 788 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 86 ஆயிரத்து 644 பேரின் தகவல்கள் குடியுரிமை ஆணையத்திடம் இருந்து பெறப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என சோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 109 பேர் விமான நிலையங்கள் அருகே கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 962 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 933 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 77 பேரின் ரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 29 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனையில் 284 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story