சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி


சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி
x
தினத்தந்தி 29 April 2020 6:43 AM GMT (Updated: 29 April 2020 6:43 AM GMT)

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு, வருகிற மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் கூடுதலாக ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பல இடங்களில் வெளியே நடமாடுவதும், மார்க்கெட், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்வதுமே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து, சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26-4-2020 (கடந்த ஞாயிறு) காலை 6 மணி முதல் 29-4-2020 இன்றிரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அமலானது இன்றிரவு முடிவடைய உள்ளது.  இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதி அளித்து உள்ளார்.  இதனால் மக்கள் அவசரமின்றி, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கி செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதன்பின்னர் மே 1ந்தேதி முதல் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாநகராட்சிகளில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் 1 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story