சென்னை, மதுரை, கோவையில் காய்கறிகள், மளிகை கடைகள் இன்று கூடுதல் நேரம் திறப்பு - நாளை முதல் பழைய நடைமுறை தொடரும்


சென்னை, மதுரை, கோவையில் காய்கறிகள், மளிகை கடைகள் இன்று கூடுதல் நேரம் திறப்பு - நாளை முதல் பழைய நடைமுறை தொடரும்
x
தினத்தந்தி 29 April 2020 8:00 PM GMT (Updated: 2020-04-30T00:59:20+05:30)

சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே இந்த 3 மாநகராட்சிகளில் காய்கறிகள், மளிகை கடைகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மட்டும் கூடுதல் நேரம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பழைய நடைமுறையில் ஊரடங்கு தொடரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை, 

கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து உள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் உள்பட 29 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல (ஹாட்ஸ்பாட்) பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

கொரோனா மேலும் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, ‘சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாநகராட்சிகளில் கடந்த 26-ந்தேதி காலை 6 மணி முதல் 29-ந்தேதி (நேற்று) இரவு 9 மணி வரையில் 4 நாட்களும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் 26-ந்தேதி காலை 6 மணி முதல் 28-ந்தேதி இரவு 9 மணி வரையில் 3 நாட்களும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். சென்னையை போன்று திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் 4 நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் அறிவித்தனர்.

இந்தநிலையில் சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் 3 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு நேற்றுமுன்தினம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து மற்ற ஊர்களில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவின்படி நேற்று அங்கு காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டன.

இந்தநிலையில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் 4 நாட்கள் அடங்கிய முழு ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனாவின் பிடியில் சிலர் சிக்கினர். ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே சென்னையை பொறுத்தவரையில் முழு ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ‘கை’ கொடுக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.

இந்தநிலையில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்ததையடுத்து, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பழைய நடைமுறைப்படி ஊரடங்கு தொடரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) முதல் 26-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.

எனினும், இன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். 1-ந்தேதி (நாளை) முதல் இந்த அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், அதி தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் தொற்று என்பதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமைகாத்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து, முக கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் கடந்த 25-ந்தேதி அன்று காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வதற்காக சந்தைகளில் குவிந்தனர். சமூக இடைவெளியை மறந்து மக்கள் திரண்டதால், இத்தனை நாட்கள் கடைபிடித்த ஊரடங்கு கட்டுப்பாடு வீணாகி போனது என்று விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story