மாநில செய்திகள்

கொரோனாவை ஒழித்து விட்டு சாதனைப்பட்டத்தைச் சூட்டிக்கொள்ளுங்கள் - மு.க.ஸ்டாலின் அறிக்கை + "||" + Get rid of Corona and get the record - MK Stalin's report

கொரோனாவை ஒழித்து விட்டு சாதனைப்பட்டத்தைச் சூட்டிக்கொள்ளுங்கள் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

கொரோனாவை ஒழித்து விட்டு சாதனைப்பட்டத்தைச் சூட்டிக்கொள்ளுங்கள் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
கொரோனாவை ஒழித்துவிட்டு அதற்கான சாதனைப் பட்டத்தைச் சூட்டிக்கொள்ளுங்கள் என்றும், கொரோனேவே ஒழியாத நிலையில், ஒழித்துவிட்டதாகப் பொய்யான மகுடம் சூட்டிக்கொள்ளாதீர்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னை,

கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உங்களை (மக்களை) நீங்களே தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், இந்நோய்த் தொற்று முதலில் சில மாவட்டங்களில் தான் அதிகமாக இருந்தது. அதன்பிறகு தலைநகர் சென்னையில் அதிகமானது. இப்போது மறுபடியும் மற்ற மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!


இந்தக் கொரோனா நோய்த்தொற்று ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே பரவிய தொடக்க நிலையில் இருந்து இன்று வரை தமிழக அரசுக்கு, மக்களின் பாதுகாப்பு கருதி, நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை நான் வழங்கி வருகிறேன். ஆனால், எதையுமே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்கவும் இல்லை; செய்யவும் இல்லை.

இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் (எடப்பாடி பழனிசாமி), “கொரோனாவைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுவரைக்கும் எந்த ஆக்கபூர்வமான ஆலோசனையையாவது அரசாங்கத்துக்குச் சொல்லி இருக்கிறாரா?“ என்று கேட்டிருக்கிறார்.

கொரோனா நோய்த் தொற்று குறித்த செய்தி பரவியவுடனே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் அதனால் சட்டமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னது யார்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கேட்டது யார்?.

கொரோனாவிற்கு 60 கோடி ரூபாய் நிதி போதாது, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குங்கள் என்று கேட்டது யார்? மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரியுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்?. பரிசோதனைகளை அதிகரியுங்கள் என்று எச்சரித்தது யார்?. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவோருக்கு ரூ.5,000 நிதியுதவி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்?

நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்டை) மறுபரிசீலனை செய்யுங்கள், சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களைக் காப்பாற்றுங்கள் என்றெல்லாம் ஆலோசனை வழங்கியது யார்?. கொரோனா காலத்தில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்று சொன்னது யார்? 10-ம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டாம் என்று சொன்னது யார்? இவ்வளவையும் சொன்னது நான் தான்.

ஆனால், ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார் என்று கேட்கிறாரே எடப்பாடி பழனிசாமி. சென்னையில் சில மண்டலங்களில் அதிகமாக நோய்ப் பரவி வருவதைப் பார்த்து, இந்த மண்டலங்களை மற்ற மண்டலங்களில் இருந்து தனியாகப் பிரித்து அரண் போல அமைத்துத் தடுங்கள் என்று நான் சொன்னேன். அந்த மண்டலத்து மக்கள் வெளியில் வரத் தேவையில்லாத அளவுக்கு, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுங்கள் என்று சொன்னேன். இதைச் செய்யாததால் தான் இன்றைக்குச் சென்னையின் 6 மண்டலங்கள் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலமாக தி.மு.க. தொண்டர்கள் களத்தில் இறங்கிச் செய்தார்கள். அப்பாவிகளை அனாதையாக அ.தி.மு.க. அரசு கைவிட்டது மாதிரி, நாங்கள் விடவில்லை. இது நாட்டு மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு பெரிய அளவில் பெயர் ஏற்படுத்தித் தந்துள்ளதைப் பார்த்து வயிற்றெரிச்சலில், இப்படி பேசி வருகிறார் முதல்-அமைச்சர்.

இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்வது ஸ்டாலின் தான் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நோயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமியும், அவர் வைத்திருக்கிற அமைச்சர்களும் அடித்த பல்லாயிரம் கோடி கொள்ளையைச் சொல்லி எங்களால் அரசியல் நடத்த முடியும்.

இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா ஆலோசனைகளையும் சொல்லிவிட்டேன். இப்போது அவருக்கு சொல்வதற்கு ஒரே ஒரு ஆலோசனைதான் இருக்கிறது. கொரோனாவை ஒழித்துவிட்டு அதற்கான சாதனைப் பட்டத்தைச் சூட்டிக்கொள்ளுங்கள். கொரோனாவே ஒழியாத நிலையில், ஒழித்துவிட்டதாகப் பொய்யான மகுடம் சூட்டிக்கொள்ளாதீர்கள்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மு.க.ஸ்டாலின் அரசியல் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகிறார் என்றும், இந்த அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக என்ன சொல்லியிருக்கிறார் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார்.

இதுவரை நான் விடுத்த ஒரு சில ஆலோசனைகளைத் தவிர, பெரும்பாலான மற்றவற்றைக் கேட்காத நிலையில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ‘ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?‘ என்று பிரச்சினையைத் திசை திருப்பி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நான் சொன்ன ஆலோசனைகள் மக்களுக்குத் தெரியும். முதல்-அமைச்சருக்கு இதுவரை தெரியவில்லை என்றால் இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்

* பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள்.

* தொற்றுப் பகுதியை மற்ற பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து, அரண் போலத் தடுங்கள்.

* வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள்.

* மறைக்கப்பட்ட 236 மரணங்கள் குறித்து விளக்கம் அளியுங்கள்.

* சித்த மருத்துவ மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேளுங்கள்.

* கேரளா எப்படி மீள்கிறது; தாராவி எப்படிக் காக்கப்படுகிறது என்பதை தெரிந்தறியுங்கள்.

இவை அனைத்தும் நான் ஏற்கனவே சொன்னவை. மீண்டும் சொல்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.