தளர்வு இல்லாத முழு ஊரடங்கு; முடங்கியது தமிழகம்: சென்னையில் சாலைகள் வெறிச்சோடின


தளர்வு இல்லாத முழு ஊரடங்கு; முடங்கியது தமிழகம்: சென்னையில் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 26 July 2020 11:45 PM GMT (Updated: 26 July 2020 8:22 PM GMT)

6-வது கட்ட ஊரடங்கில் கடைசி தளர்வு இல்லாத முழு ஊரடங்கையொட்டி, தமிழகம் முடங்கியது. சென்னையில் சாலைகள் வெறிச்சோடின.

சென்னை, 

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவியதோடு, அனைவரின் இயல்பான வாழ்க்கையை முடக்கிப்போட்டு விட்டது.

கொரோனா வைரசால் உலக அளவில் லட்சக்கணக்கானோர் உயிர் இழந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 6-வது கட்டமாக இந்த மாதம் ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த 6-வது கட்ட ஊரடங்கு காலத்தில் வந்த 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த 6-வது கட்ட ஊரடங்கின் கடைசி தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த தளர்வு இல்லாத ஊரடங்கில் பாலகங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே திறந்து இருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தளர்வு இல்லாத முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் முடங்கியது போல் காட்சி அளித்தது. அனைத்து சாலைகளும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன. ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள், போலீசாரின் வாகனங்கள், பத்திரிகையாளர்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது.

சென்னையின் பிரதான சாலைகளில் உள்ள பெரும்பாலான மேம்பாலங்கள் தடுப்புகளால் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும், பெரும்பாலான சிறு சாலைகள் பெரிய சாலைகளில் வந்து இணையும் இடங்களில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு இருந்தன.

சென்னையில் உள்ள அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா கடற்கரை சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, வடபழனி ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரிகளின் போக்குவரத்து எப்போதும் போன்று காணப்பட்டது.

மேலும் சாலைகளில் அங்கு ஒன்றும், இங்கு ஒன்றுமாக ஒரு சில கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வலம் வந்தன. ஆனால், ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களை சாலைகளில் பார்க்க முடியவில்லை. சாலைகளில் வலம் வந்த வாகனங்களை ஆங்காங்கே போலீசார் தடுத்து தீவிர விசாரணைக்கு பின்னர் உரிய காரணம் கூறும் வாகனங்களை பயணிக்க அனுமதித்துடன், காரணம் இன்றி அதாவது மருத்துவ சம்பந்தம் இல்லாமல் சுற்றி வந்த வாகனங்களை வழக்குப்பதிவு செய்து அனுப்பி வைத்தனர். உரிய ஆவணங்களும் இல்லாமல் வந்த சில வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சென்னையை பொறுத்த வரை நேற்றைய தளர்வு இல்லாத முழு ஊரடங்கு வெறிச்சோடி காணப்பட்டாலும், கடந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளில் இல்லாத வகையில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊர் சுற்றும் வாலிபர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக தென்பட்டது. மேலும், பெருநகர ‘சென்னை மாநகராட்சி பணிக்காக’ என்று காரில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து வழக்குப்பதிவு செய்த சம்பவமும் நடைபெற்றது.

மொத்தத்தில், நேற்றைய தளர்வு இல்லாத ஊரடங்கில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டாலும், ஏதாவது காரணங்களை கூறி சாலைகளில் வலம் வந்த வாகனங்களை பார்க்கும் போது மக்களிடையே கொரோனா நோய் தொற்று பீதி குறைந்து இருப்பதாகவே தெரிகிறது.

சைக்கிளில் வலம் வந்த சென்னை மக்கள்

தளர்வு இல்லாத முழு ஊரடங்கின் போது, பொதுவாக போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வலம் வருபவர்களை மடக்கிப்பிடித்து வழக்குப்பதிவு மற்றும் வாகன பறிமுதல் செய்வது வழக்கம். சைக்கிளில் பயணிப்பவர்களை போலீசார் கண்டு கொள்வது இல்லை.

இதனை பயன்படுத்தி சென்னை வாழ் மக்கள் பலர் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு சென்னையை வலம் வந்தனர். ஆனால், சென்னை செம்பியம் பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் சைக்கிள் ஓட்டிகளை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ஒரு சிலர் மட்டும் மருத்துவ காரணங்களுக்காக வந்ததாக தெரிவித்தனர். அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். மற்றபடி முறையான காரணம் இன்றி வந்த சைக்கிள் ஓட்டிகளை சுமார் ½ மணி நேரம் அங்கேயே நிறுத்தி வைத்து கொரோனா தொற்று குறித்து உரிய அறிவுரைகளை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story