காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து பணிக்குத் திரும்பினார்


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து பணிக்குத் திரும்பினார்
x
தினத்தந்தி 31 July 2020 11:19 AM GMT (Updated: 31 July 2020 11:19 AM GMT)

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இன்று பணிக்குத் திரும்பினார்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கடந்த ஜூலை 15 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பை ஏற்றார்.  

இதனை தொடர்ந்து பொறுப்பு ஆட்சியராக நியமிக்கப்பட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் பொறுப்பையும் ராஜகோபால் கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, சிகிச்சை பெற்று குணமடைந்து இன்று(வெள்ளிக்கிழமை) பணிக்குத் திரும்பினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்து, அவர் தனது பணிகளைத் தொடங்கினார். காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முக பிரியா, சார் ஆட்சியர் எஸ். சரவணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Next Story