இருமொழி கொள்கை குறித்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு


இருமொழி கொள்கை குறித்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 3 Aug 2020 10:04 PM GMT (Updated: 3 Aug 2020 10:04 PM GMT)

தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஆதரிக்காது என்றும், இருமொழி கொள்கையை மட்டுமே தமிழகம் பின்பற்றும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில், ‘தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரால் மும்மொழித்திட்டம் புகுத்தப்பட்டதை எதிர்த்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. மத்திய அரசின் மொழிக்கொள்கை மட்டுமல்ல கல்வி கொள்கையே பல்வேறு தவறுகளை கொண்டது. இதனை சுட்டிக்காட்டி தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த அடிப்படையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மும்மொழி திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இறுதிவரை உறுதியான தமிழக அரசின் நிலைப்பாடாகவே இது இருக்க வேண்டும். இத்தோடு மட்டுமல்ல, சமூகநீதி, இட ஒதுக்கீடு, பெண் கல்வி போன்றவற்றில் எதுவும் கூறாத கல்விக்கொள்கை, பல நுழைவுத்தேர்வுகள்-இவை பற்றியும் தமிழக அரசு தனது உறுதியான கருத்தையும், நிலைப்பாட்டையும் அறிவித்துள்ளது. இந்த முடிவை உடனடியாக அறிவித்த தமிழக முதல்-அமைச்சருக்கு எங்களது மகிழ்ச்சி கலந்த நன்றி’ என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. இதைத்தான் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மும்மொழி கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்து காரணங்களும் 3, 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில், ‘மும்மொழி திட்டத்தை கைவிட வேண்டும், அதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது, தமிழக அரசு கருத்து கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். இதனை மத்திய அரசிடம் உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

மும்மொழி கொள்கைக்கு முதல்-அமைச்சரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரம், தேசிய மதிப்பீட்டு மையம், திறன் மதிப்பீடு, மறு ஆய்வு மற்றும் முழுமையான மேம்பாட்டிற்கான அறிவு பகுப்பாய்வு, தேசிய தேர்வு முகமை, தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதல்-அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும், பெரும்பாலான கட்சியினரின் கோரிக்கை அடிப்படையிலும் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தொடர்ந்து, தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

இருமொழிக்கொள்கையில் உறுதி காட்டியிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டுகிறேன். தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். கோரிக்கை வைக்க உரிமையிருந்த எனக்கு நன்றி சொல்லும் கடமையும் இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருமொழி கொள்கையை தான் கடைப்பிடிப்போம் என்று தொடர்ந்து முழக்கமிட்ட முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story