நீலகிரி, கோவை, தேனியில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


நீலகிரி, கோவை, தேனியில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2020 11:15 PM GMT (Updated: 6 Aug 2020 9:54 PM GMT)

அவலாஞ்சியில் ஒரே நாளில் 58 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. நீலகிரி, கோவை, தேனியில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தென்மேற்கு பருவகாற்று காரணமாக நீலகிரி, கோவையில் கடந்த 3 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதுவும் நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இதேபோல் தென்மேற்கு பருவமழை காலத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ. மழை பதிவாகி அனைவரையும் வியப்படைய செய்தது.

அதேபோல், இந்த ஆண்டும் மழை பொழிந்து வருகிறது. அந்தவகையில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை கொட்டி தீர்த்திருக்கிறது. அதற்கு முந்தைய நாளில் 30 செ.மீ.க்கு மேல் மழை பதிவானது. இந்த நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, தேனியில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் அதி கன மழையும், கோவை, தேனி, மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும். இதேபோல் வருகிற 10-ந் தேதி வரை இந்த பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து ஜீபஜாரில் 33 செ.மீ., மேல்பவானியில் 32 செ.மீ., மேல்கூடலூரில் 31 செ.மீ., நடுவட்டத்தில் 23 செ.மீ., தேவாலாவில் 22 செ.மீ., பந்தலூர், ஹாரிசன் எஸ்டேட்டில் தலா 18 செ.மீ., சின்னக்கல்லாறு, சோலையாறில் தலா 11 செ.மீ., சின்கோனாவில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல மேலும் சில இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி பகுதியில் பலத்த காற்று வீசியது. பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் முறிந்து விழுந்தன. மாவட்டத்தில் நேற்று 50-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

எமரால்டு சத்யா நகரில் மின்வாரிய குடியிருப்பில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பையொட்டி கட்டப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது. குடியிருப்பின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது. இந்த நிலச்சரிவால் மண் 400 மீட்டர் தூரம் வரை அடித்து சென்றது.

அதே பகுதியில் மற்றொரு இடத்தில் தடுப்புச்சுவர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் அங்கு 15 வீடுகளில் வசித்து வந்த மக்கள் உடனடியாக காலி செய்யுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கூடலூரில் ஆதிவாசி கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் இரவு முழுவதும் வெள்ளத்தில் சிக்கிய தம்பதி உயிருடன் மீட்கப்பட்டனர்.

Next Story