நீர்வரத்து 1 லட்சம் கன அடியை தாண்டியதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு

நீர்வரத்து 1 லட்சம் கன அடியை தாண்டியதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு
x
தினத்தந்தி 10 Aug 2020 11:15 PM GMT (Updated: 10 Aug 2020 10:13 PM GMT)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியை தாண்டியதால் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்தது. மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர், 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியை தாண்டியதால் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்தது. மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானதால், காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது. இதன்படி நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியானது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு அதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் மள,மளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 75.33 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 86.91 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது.

Next Story