வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 18 Aug 2020 8:21 AM GMT (Updated: 2020-08-18T13:51:07+05:30)

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை 19-ம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுர், திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். 

நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 5 செ,மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், பந்தலூர் மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகி உள்ளது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் வரும் ஆகஸ்டு 19-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. 

ஆகஸ்டு 19-ம் தேதி, வடக்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்டு 19 முதல் 21-ம் தேதி வரை, தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story